Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐடி நிறுவனங்களின் பணிநீக்க அறிவிப்பால் ஊழியர்கள் அச்சம்: வெளிநாடுகளில் ஊழியர்களை எளிதில் பணிநீக்கம் செய்ய முடியாது

டெல்லி: டிசிஎஸ், இன்போசிஸ், மைக்ரோ சாப்ட் போன்ற முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெயரில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் தகவல் தொழில் நுட்ப துறையில் சுமார் 13 கோடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் மட்டும் பெங்களூர், சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் நேரடியாகவும், 2 கோடி பேர் மறைமுகமாகவும் இத்துறையில் வேலை பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டு உலக அளவில் சுமார் 1,115 நிறுவனங்களில் இருந்து 2,38,461 மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. நடப்பாண்டில் 8 மாதங்களில் மட்டும் 1,33,070 அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் மட்டும் இந்தியாவில் 12,000 ஊழியர்களையும், ஆரக்கிள் நிறுவனம் 1,500 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளன. இன்போசிஸ், சிடிஎஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த வருடத்தில் குறிப்பிட்ட அளவில் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக ஐடி துறையில் நிலவும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் காரணமாக ஊழியர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மனித உழைப்பின் தேவையை குறைப்பதே இதற்கு முக்கிய கரணம் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெளிநாடுகளின் ஊழியர்களை எளிதில் பணிநீக்கம் செய்யமுடியாத நிலையில், இந்தியாவில் ஐடி ஊழியர்களின் வேலை பாதுகாப்புக்கு சட்டங்கள் இல்லாதது கவலை அளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.