Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

`நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் படித்தவர் இஸ்ரோ மையத்திற்கு திருப்பத்தூர் மாணவர் தேர்வு

திருப்பத்தூர்: தமிழக அரசின் `நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பல மாணவர்கள் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் உயர்கல்வி படித்து சாதித்து வருகின்றனர். இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விஜய்காந்த் (27) என்ற மாணவர், இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ஐஐஆர்எஸ்- டேராடூன்) ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் செயற்கைக்கோள் பகுப்பாய்வு மற்றும் புகைப்பட வரைபடவியல் திட்டத்திற்கு தேசிய அளவில் தேர்வாகியுள்ளார். அதற்கான சான்றிதழுடன் அவர் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் சிவசவுந்திரவல்லியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழை காண்பித்தார். அப்போது அவருக்கு புத்தகம் பரிசாக வழங்கி கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் மாணவன் விஜய்காந்த் கூறியதாவது: என் வாழ்க்கையில் இன்று மிக முக்கிய தருணம். நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். பத்தாம் வகுப்பு வரை என் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 12ம் வகுப்பு வரை நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். பின்னர் பி.இ, சிஎஸ்இ படிப்பை கோவை யூஐடியில் படித்தேன். பின்னர் சென்னை அண்ணா பல்கலையில் எம்.டெக் ஐடி படிப்பை முடித்தேன். எனது கல்விப்பயணத்தில் நான் செய்த முயற்சிகளுக்காக பல தேசிய அங்கீகாரங்கள் கிடைத்தன. குறிப்பாக, கொரோனா காலத்தில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆன்லைனில் பங்குபெற்று, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பயனளிக்கும் மொபைல் ஆப் செயலிகளை உருவாக்கியதற்காக மாநில அளவில் சான்றிதழ் பெற்றேன்.

தொடர்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கான பல விருதுகளையும் பெற்றேன். கல்வியுடன், சமூக சேவை, விலங்கு பாதுகாப்பு, மாணவர் மேம்பாட்டு திட்டங்களில் தொடர்ந்து பங்களித்து வருகிறேன். இந்தியாவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு மற்றும் புகைப்பட வரைபடவியல் பயிற்சி திட்டத்திற்கு தேசிய அளவில் தேர்வாகியுள்ளேன். எனது கல்வி பயணத்திற்கு ஒரு முக்கிய காரணம் தமிழ்நாடு அரசின் அரசு கல்வி உதவித்திட்டங்கள் தான். இந்த திட்டங்கள் இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் எம்.டெக் வரை படித்து, இஸ்ரோவின் ேடராடூனில் உள்ள ஐஐஆர்எஸ் போன்ற தேசிய அளவிலான அமைப்பில் தேர்வாகும் வாய்ப்பு கிடைத்திருக்காது. எனவே இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு கூறினார்.