Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.12,000 கோடியில் இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கம் ‘நிசார்’ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எப்-16: புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கும்

சென்னை: இஸ்ரோ - நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. அதன்படி, கடந்த 2014 செப்.30ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் 2,392 கிலோ எடையில் நிசார் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவடைந்தன. இஸ்ரோ - நாசா இணைந்து தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோளில் இரண்டு முக்கிய ரேடார் தொழில்நுட்பங்கள் உள்ளன. எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் இந்த செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் இணைந்து பூமியின் மேற்பரப்பை மிக விரிவாகவும், நுணுக்கத்துடன் படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது, 12 நாளுக்கு ஒருமுறை மொத்த பூமியையும் அங்குலம் அங்குலமாக நிசார் செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பும். மேலும் பனிக்கட்டிகள் எவ்வாறு உருகுகின்றன, நிலச்சரிவுகள் எங்கு ஏற்பட வாய்ப்புள்ளது உள்ளிட்டவை குறித்து முன்கூட்டியே இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும். பூமியில் நிகழும் இயற்கை மாற்றங்களை ஆராய்வதே நிசார் செயற்கைக்கோள் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

குறிப்பாக, வனப்பகுதிகள், பயிர் நிலங்களில் ஏற்படும் மாறுதல்கள், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஆகியவை குறித்து நிசார் செயற்கைக்கோள் ஆராய உள்ளது. இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த இந்த ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவு தளத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணியளவில் ஏவப்படுகிறது.

இதற்கான இறுதி கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது. அதேபோல் 3 முதல் 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.