* திட்டமிட்டபடி புவிவட்ட பாதையில் சி.எம்.எஸ் -3 செயற்கைகோள் நிலை நிறுத்தம்
* பாதுகாப்பு பணி - கடலோர எல்லைகளை கண்காணிக்கும்
* அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை ஏவி விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை
சென்னை: இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படும் எல்.வி.எம்.03 (ஜி.எஸ்.எல்.வி மார்க் - 3) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. கடலோர எல்லைகளை கண்காணிக்கும் வகையில் சி.என்.எஸ் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு தகவல் தொடர்பு செயற்கைகோள்களை விண்ணில் தொடர்ந்து ஏவி வருகிறது. அந்தவகையில் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி மார்க் - 03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 5.26 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக சீறி பாய்ந்தது.
விண்ணில் செலுத்திய 16.14 நிமிடத்தில் திட்டமிட்டபடி சுற்றுவட்ட பாதையில் சி.என்.எஸ் -03 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டன. இதனையடுத்து விஞ்ஞானிகள் கைகளை தட்டி ஒருவரை ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இதுவரை புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பதால் இது பாகுபலி என செல்லமாக அழைக்கப்டுகிறது. இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் கயானாவில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு அரியானே - 5 என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் எடை 5854 கிலோவாகும்.
அதன் பிறகு இந்திய மண்ணில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக சி.என்.எஸ் - 03 பார்க்கப்படுகிறது. 3 படி நிலைகளை கொண்ட இந்த செயற்கைகோள் எஸ்.200 என்ற இரண்டு சாலிட் மோட்டார் ஸ்ட்ராப்-ஆன்ஸ், எல்110 என்ற திரவ புரோபல்லண்ட் கோர் ஸ்டெஜ், சி25 என்ற கிரையோஜெனிக் ஸ்டேஜ் ஆகியவை ஆகும். இந்த செயற்கைக்கோள் இந்திய ராணுவத்தின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தல், எல்லை கண்காணிப்புக்கான உயர்தர தகவல் இணைப்பு, கடற்படைக்கான பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், செயற்கைக்கோள் வழி வழிகாட்டும் (Navigation) சேவைகள் வழங்குகிறது.
முதன்முதலில் 2014ம் ஆண்டு டிசம்பரில் எல்.வி.எம்-3 ஆபரேஷனல் ஃபிளைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றிகரமாகவே அமைந்துள்ள நிலையில், தற்போது 5வது மிஷன் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த திட்டத்தை மோசமான வானிலை சூழல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளோம்.
புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட மிக அதிக எடை கொண்ட செயற்கைகோள் இதுவாகும். இதற்காக, ராக்கெட்டின் உந்துவிசை திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராக்கெட்டின் மொத்த திறன் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் வரலாற்றில் முதல்முறையாக, செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பிறகும், கிரையோஜெனிக் இயந்திரம் மீண்டும் 100 விநாடிகள் இயக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சாதனையாகும்.
இதன்மூலம் பல்வேறு செயற்கைக் கோள்களை, ஒரே ராக்கெட்டில் சுமந்து சென்று, வெவ்வேறு புவிவட்டப் பாதைகளில் நிலை நிறுத்த முடியும். அடுத்தகட்டமாக 5 மாதங்களில் 7 ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். எல்விஎம் 3-எம் 6 ராக்கெட் திட்டத்தின் மூலம் தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வரும் டிசம்பர் 2ம் வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் செலுத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் எஸ்எஸ்எல்வி எல் 1 திட்டம் தனியாருக்காக அனுப்பப்பட உள்ளது.
தொடர்ந்து மிக முக்கியமாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 34 புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. பின்னர், இஓஎஸ்-5 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. மேலும், டிடிஎஸ் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தபின்னர் 3 வாரங்களுக்கு ஒரு ராக்கெட் ஏவப்படும்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதற்கு முன்னதாக 3 ஆளில்லா விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும். அதில், முதலாவது கலனை மார்ச் மாதத்துக்குள் அனுப்பவதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்துக்கான உபகரணங்கள், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்துள்ளன. தற்போது, அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் 50 விண்வெளி திட்டங்களை செயல்படுத்திட இலக்கு நிர்ணயித்துள்ளார். இது, எளிதானது கிடையாது. அதற்காக நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறுஅவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, எல்விஎம் 3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் ராஜேந்திர குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
* 15 வருட ஆயுட்காலம் கொண்ட செயற்கைக்கோள்
ஜிசாட் 07 செயற்கைக்கோளுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே சுமார் 1600 கோடியில் தயாரிக்கப்பட்ட சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோள் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இதில் விரிவுபடுத்தப்பட்ட யுஎச்எப், சி, க்யூ, எஸ் போன்ற மல்டி பேண்ட் அலைக்கற்றைகள் உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இது முழுவதும் இந்திய கடற்படை மற்றும் ராணுவத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.
* இஸ்ரோவின் ராக்கெட்டுகள் பட்டியல்
* இஸ்ரோ விஞ்ஞானிகள், திட்டத்தின் நோக்கங்கள், இலக்கு சுற்றுப்பாதை ஆகியவற்றைப் பொறுத்து ஏவுகணை வாகனங்களை வகைப்படுத்தி உள்ளனர்.
* பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, மற்றும் எல்.வி.எம்-3 ஆகியவை இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகின்றன.
* பி.எஸ்.எல்.வி: இஸ்ரோவின் நம்பகமான ‘வேலைக்காரன்’ என்றழைக்கப்படுகிறது. இது சுமார் 1,750 கிலோ எடையைச் சுமக்கும்.
* எஸ்.எஸ்.எல்.வி: 500 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை குறைந்த பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பயன்படுகிறது.
* ஜி.எஸ்.எல்.வி: சுமார் 2,200 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லப் பயன்படுகிறது.
* எல்.வி.எம்-3: 4,000 கிலோவுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறனை அளிப்பதன் மூலம், இஸ்ரோவின் திறனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
