கடலோர எல்லைகள் கண்காணிப்பிற்கான CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ அறிவிப்பு
பெங்களூரு : கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட் 7 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 2-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,,400 கிலோ கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் சிஎம்எஸ்-03 அதிக எடை கொண்டதாகும். இந்த செயற்கைக் கோளில் விரிவுப்படுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன. இந்திய ராணுவத்தின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இந்த செயற்கைக் கோள் உதவி செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
