நெல்லை: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 2 ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஏவுதளம் அமைக்க கடந்த ஆண்டு பிப்.28ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து சுற்றுச்சுவர், கட்டிடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ராக்கெட் ஏவுதளம் (லாஞ்ச் பேட்) அமைக்க கடந்த 27ம் தேதி இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட சிறிய ரக ராக்கெட் ஏவ முடியும். இந்தப் பணிகள் இன்னும் 16 மாதங்களில் நிறைவு பெறும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் அப்போது தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக நெல்லை, பாளையங்கோட்டையில் ரூ.7 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரத்தில் விண்கல கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் மற்றும் மின்சார பணிகளுக்கு இஸ்ரோ டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க வருகிற 26ம் தேதி கடைசி நாளாகும். இந்தப் பணிகளை 9 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் திரவ எரிபொருள் ராக்கெட் இன்ஜின் சோதனை மையம் ஆகியவற்றை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் விண்கல கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ அமைப்பது குறிப்பிடத்தக்கது.
* திருச்செந்தூரில் போக்குவரத்து முனையம்
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் நிலையில், அதற்கு அருகே திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் போக்குவரத்து முனையமும் இஸ்ரோவின் சார்பில் அமைக்கப்பட உள்ளது. ரூ.3.26 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த போக்குவரத்து முனைய கட்டுமானப் பணிக்கு இஸ்ரோ ெடண்டர் கோரியுள்ளது.