காசா சிட்டி: காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவும் காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 135 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பட்டினி மரணங்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார். ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா கூறுகையில், ‘நெதன்யாகுவின் நடவடிக்கை கவலையளிக்கிறது’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் கூறுகையில், ‘தாக்குதலை தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறினார். காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.