டெல்அவிவ்: இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையேயான போர் 2 ஆண்டுகளை நெருங்குகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் கடுமையான தாக்குதல்களால் காசாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளும் தடைமட்டமாக்கப்பட்டு விட்டன. ஹமாஸின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுவிக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த போரில் பலி எண்ணிக்கை 66,000 ஐ கடந்து விட்டது. இஸ்ரேல் நடத்தும் கோரத் தாக்குதல்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்து வருகின்றன. காசா மீதான தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க இஸ்ரேலுக்கு ஒரு நெருக்கடி உண்டாகி உள்ளது. பல நாடுகள் டிரம்பையும் விமர்சித்துள்ளன.
இந்த நிலையில், காசா- இஸ்ரேல் போர் நிறுத்தம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஐநா பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ளார் நெதன்யாகு. ஹமாசுடன் இஸ்ரேல் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நெதன்யாகு கூறுகையில்,‘‘ போர் நிறுத்தம் குறித்து பேசி வருகிறோம். இன்னும் எதுவும் முடிவாகவில்லை. ஆனால், போர் நிறுத்தம் குறித்து டிரம்பின் குழுவோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அது நடக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து அதிபர் டிரம்ப் 21 முக்கிய நிபந்தனைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.