ஜெருசலேம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே காசாவில் நீடித்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. பலகட்டங்களாக நடந்த இந்த சமரச பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் நேற்று இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து காசாவில் இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை எழுப்புவதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது. மத்திய காசாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளூர் நேரப்படி நண்பகலில் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆரவாரமிட்டனர். அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த இந்த மிகப்பெரிய போர் நிறுத்த திட்டத்தில், ஹமாஸ் நிராயுதபாணியாகுமா, யார் காசாவை நிர்வகிப்பார்கள் என்பது போன்ற பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், அடுத்தடுத்த கட்டங்களில் ஹமாஸ் ஆயுதங்களை களைந்து காசாவில் ராணுவம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றார்.