முடிவுக்கு வரும் இஸ்ரேல்-காசா போர்?: தங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்: ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாலஸ்தீன அதிபர் உத்தரவு!!
நியூயார்க்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாலஸ்தீன அதிபர் வலியுறுத்தியுள்ள சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. கடத்த 2023ம் ஆண்டு ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து கண்முடி தனமாக தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை போர் நீடித்து வருகிறது. இருதரப்புக்குமான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், ஐ.நா.வின் பொதுச்சபையின் 80வது ஆண்டு பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது, காசா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு ஹமாஸ் அமைப்பினரின் தலையீடு இருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிகார சபையின் அதிபரான மஹ்மூத் அப்பாஸ் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளை நாங்கள் பாராட்டுகிறோம். இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காதவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையில் முழு உறுப்பினராவதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் நாடுகிறோம் என்றும், இனி வரும் காலங்களில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் அமைப்பினருக்கு எந்தவித பங்களிப்பையும் வழங்கக்கூடாது என அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் ஹமாஸ்அமைப்பினர் மற்றும் பிற ஆயுத குழுவினர் தங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை பாலஸ்தீன தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். எங்களுக்கு வேண்டியது ஆயுதங்கள் அல்லாத ஒரு சட்டபூர்வமான பாதுகாப்பை கொண்ட ஒருங்கிணைந்த அரசு தான் என பேசினார். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்த பின் அதிபர் பதவிக்கான தேர்தல் மற்றும் பார்லிமென்டுக்கு தேர்தல் நடத்தப்படும் என அவர் கூறினார். இஸ்ரேல் - ஹாமாஸ்க்கு இடையேயான போர் முடிவுக்கு வரும் என்கின்றனர் பொருளாதார அரசியல் வல்லுநர்கள்.