Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காசா படுகொலைகளுக்கு எதிர்ப்பு: இஸ்ரேல் சினிமா விழாக்கள் புறக்கணிப்பு; 1,800 உலக நடிகர், நடிகைகள் அறிவிப்பு

லண்டன்: காசாவில் நடைபெறும் படுகொலைக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் சினிமா அமைப்புகளைப் புறக்கணிக்கப் போவதாக 1800க்கும் மேற்பட்ட உலக சினிமா பிரபலங்கள் அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக உலக அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்தச் சூழலில், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பல தரப்பினரும் இஸ்ரேல் மீது பொருளாதார மற்றும் கலாசாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் கூட, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த 200 எழுத்தாளர்கள் இஸ்ரேலுக்கு முழுமையான புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர்.

இதுதொடர்பாக ‘கார்டியன்’ பத்திரிகையில் அவர்கள் வெளியிடப்பட்ட கடிதத்தில், பிரபல சினிமா பிரபலங்கள் ஆலிவியா கோல்மன், மார்க் ரஃபலோ, எம்மா ஸ்டோன், டில்டா ஸ்வின்டன், ஜேவியர் பார்டெம் போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் கையொப்பமிட்டுள்ளனர். அதில், ‘பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் இனப்பாகுபாட்டிற்கு உடந்தையாக இருக்கும் இஸ்ரேல் நாட்டின் சினிமா விழாக்கள், திரையரங்குகள், ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்ற மாட்டோம்’ என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஜெருசலேம் திரைப்பட விழா, ஹைஃபா சர்வதேசத் திரைப்பட விழா போன்ற முக்கிய அமைப்புகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புறக்கணிப்பானது தனிப்பட்ட இஸ்ரேல் நடிகர், நடிகைகளுக்கு அக எதிரானது அல்ல என்றும், இஸ்ரேல் அரசின் கொள்கைகளுக்குத் துணைபோகும் நிறுவனங்களுக்கு எதிரானது மட்டுமே என்றும் அந்த மடலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.