லாஸ் ஏஞ்சல்ஸ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த யூதப் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளரான நடிகைக்கு, மனித மண்டை ஓடுகளை பார்சலில் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியான ‘எச்3’யின் இணைத் தொகுப்பாளரான நடிகை ஹிலா க்ளெய்ன், தனது யூதப் பாரம்பரியம் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதனால், கடந்த சில மாதங்களாக இணையத்தில் இவருக்குத் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்த வண்ணம் இருந்தன. இந்தச் சூழலில், சமீபத்தில் இவரது குழந்தைகள் முறையாகக் கவனிக்கப்படவில்லை என குழந்தைகள் மற்றும் குடும்ப நல சேவைத் துறைக்கு மர்ம நபர்கள் புகாரை அளித்தனர். இந்தத் தவறான புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய அதே நாளில், இவர்களது அலுவலகத்திற்கு வந்த ஒரு தபாலில் இரண்டு உண்மையான மனித மண்டை ஓடுகள் இருந்ததைக் கண்டு ஹிலா மற்றும் அவரது கணவர் ஈதன் க்ளெய்ன் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவர்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் ஹிலா தெரிவித்துள்ளார். தொடர் மிரட்டல்களால் தனது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள ஹிலா, ‘என் யூதப் பாரம்பரியத்திற்காகப் பேசுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்’ என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனது பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளதுடன், அதனை மறைத்து எடுத்துச் செல்வதற்கான உரிமத்திற்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


