சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜீபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: இந்திய பிரிவினையின் போது பல லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், இந்த வன்முறையை முஸ்லிம் லீக் தான் திட்டமிட்டு கட்டவிழ்த்ததாகவும், மேலும் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தினரை காபிர் என்று முத்திரை குத்தியதால் பல லட்சக்கணக்கானோர் வேரறுக்கப்பட்டதாகவும், ராஜ் பவனின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நடுநிலையாளர் ஆக இருக்க வேண்டியவர், தன் சொற்களால் சமுதாயத்தில் விரிசல் உண்டாக்குவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல. மேலும், இந்தியப் பிரிவினையின் போது லட்சக்கணக்கான மக்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக அவர் தெரிவிக்கும் கருத்திற்கு நம்பகமான ஆதாரம் ஏதேனும் அவரிடம் உள்ளதா, கொல்லப்பட்டவர்கள் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எங்கு, எப்போது, எப்படி என்ற உண்மையான விவரங்களை அவர் சமர்ப்பிக்க முடியுமா.
சமுதாயத்தில் அவதூறுகளை பரப்புவதன் மூலம் வெறுப்பை விதைக்க முயற்சிக்கிறார். மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை புறக்கணிக்கும் ஆளுநரின் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.