ஈஷா மண் காப்போம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O’: ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்கிறார்
சென்னை: ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (13/08/2025) சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ‘மண் காப்போம் இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்று இக்கருத்தரங்கம் குறித்து பேசினர்.
சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான மெகா பயிற்சி கருத்தரங்குகளும், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 5 முதல் 10 வரையிலான ஒரு நாள் களப்பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனுடன் கோவை செம்மேடு மற்றும் திருவண்ணாமலையில் மண் காப்போம் இயக்கம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி இயற்கை பண்ணைகளில் 3 மாத இலவச களப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சிகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை, ‘இயற்கை விவசாய பயிற்றுநர்களாகவும்’ உருவாக்கி வருகிறோம். அவர்களின் பண்ணைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O
இன்றைய சூழலில் வேளாண் சார்ந்த சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஆர்வம் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. இன்று நம் நாட்டின் மொத்த ஜிடிபி உற்பத்தில் 30 - 40 சதவீதம் சிறு குறு நிறுவனங்களில் இருந்து தான் வருகிறது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்களும் முக்கியமான இடம் வகிக்கிறது. இதற்கான எதிர்காலமும் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இதனால் தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்துகிறது. கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பினை தொடர்ந்து இந்தாண்டு எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O நடத்தப்படுகிறது.
இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையுரை ஆற்ற உள்ளார்.
கருத்தரங்கு பேச்சாளர்கள்
இக்கருத்தரங்கில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதன் வளர்ச்சிக்கு உதவும் MSME திட்டங்கள், பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்வது குறித்த யுக்திகள், சந்தைப்படுத்துவதில் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், முக்கியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நபார்டு கடனுதவி திட்டங்கள் குறித்து நபார்டின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து 10,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பயிற்சியளித்த குளோபல் டெக்னாலஜி நிறுவனத்தின் வசந்தகுமார், வேளாண் வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் MSME அரசுத் திட்டங்கள் குறித்து வணிக யுக்தி ஆலோசகர் எம்.கே.ஆனந்த், அக்ரி ஸ்டார்ட் அப் குறித்து ஆதி முதல் அந்தம் வரை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் வசந்தன் செல்வம், உலகத்தரத்திலான பிராண்டிங், பேக்கேஜிங் குறித்து மதுரையைச் சேர்ந்த பேக்கேஜிங் நிபுணர் அஸ்வின் உள்ளிட்டோர் துறை சார்ந்த நுட்பங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுடன் நஞ்சில்லா உணவு பொருட்கள் தயாரிப்பில் கொட்டும் லாபம் குறித்து சென்னை மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் அர்ச்சனா ஸ்டாலின், விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள்கள் குறித்து தஞ்சாவூர் வசீகரா வேதா விஜயா மகாதேவன், மதுரை தனா ஃபுட் பிராடக்ட்ஸின் தனலட்சுமி விக்னேஷ், பனங்கருப்பட்டி தொழில் நுட்பங்கள் குறித்து தூத்துக்குடி ஃபாம் இரா நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.
கண்காட்சி
இந்த கருத்தரங்கில் வேளாண் சார்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.