Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈஷா யோகா மையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விவசாய நிலங்களில் விடப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவு நீர், அருகில் உள்ள விவசாய நிலங்களில் வெளியேற்றப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈசா மையத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்களை நடத்த தடை விதிக்கக் கோரி கோவை செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிவஞானம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், கோவை இக்கரை, பூலுவாம்பட்டியில் உள்ள ஈசா மையத்திற்கு அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பும் செய்து வருகிறேன். 195 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஈஷா மையத்தில் 5000க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். சிவராத்திரி போன்ற விழா காலங்களில் லட்சக்கணக்கான நபர்கள் திரள்கிறார்கள்.

ஈஷா யோகா மையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல், கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் விடுவதால் கால்நடைகள், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நிலத்தடி நீர் மாசடைகிறது. எனவே, கழிவு நீரை வெளியேற்றுவதற்கு முறையான வசதிகளை செய்யும் வரை விழாக்கள் நடத்துவதற்கும், பக்தர்கள் கூடுவதற்கும் அனுமதிக்க கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், விழா நடக்கும் நாட்களில் லட்சக்கணக்கான நபர்கள் வருகிறார்கள். அப்பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. சிவராத்திரி நாட்களில் ஒலி, ஒளி மாசு காரணமாக அருகில் உள்ள வனப்பகுதியில் வசிக்கும் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மலையே அதிரும் வகையில் சத்தங்கள் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். ழிவு நீரை தங்கள் நிலத்திற்கு விடுவதற்கு தடை விதிக்கு வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், மாசுகட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய தயாராகஉள்ளதாக தெரிவித்தார். ஈஷா யோகா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவு நீர் அருகில் உள்ள நிலங்களில் வெளியேற்றப்படவில்லை என்பதை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும். இந்த மனுவுக்கு தமிழக அரசுக்கும், ஈஷா மையமும் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.