நிங்போ: ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவின் நிங்போ நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் (20) பங்கேற்றார்.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஈஷா சிங், சீன வீராங்கனை யாவோ ஸிங்ஸுவானை 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி கண்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த பிரிவில், தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய வீராங்கனை ஓ யெஜின் வெண்கலப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஈஷா பெறும் முதல் தங்கப்பதக்கம் இது.
நேற்று நடந்த ஆடவர் பிரிவு 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் பவேஷ் ஷெகாவத், 575 புள்ளிகளுடன் 22வது இடத்தை பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் பிரதீப் சிங் ஷெகாவத், அதே புள்ளிகளுடன் 23ம் இடத்தையும், மந்தீப் சிங், 562 புள்ளிகளுடன் 39ம் இடத்தையும் பிடித்தனர்.