Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்குரு முன்னிலையில் வரும் 21ம் தேதி ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு

கோவை: ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (18/09/25) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பங்கேற்று பேசினார்.

ஈஷா கிராமோத்சவம்

வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு, அடையாளங்களை கடந்து செல்லும் தன்மை மற்றும் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஆகிய பலன்களை விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் பெற முடியும். இதன் அடிப்படையில் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக விளையாட்டை கொண்டு வரும் நோக்கில், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா சத்குருவால் 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஈஷா கிராமோத்சவம்-2025;- 6 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம்

ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் 17-ஆவது பதிப்பான “ஈஷா கிராமோத்சவம்-2025” தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.

இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது.

ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்

ஈஷா கிராமோத்சவ போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். இதில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட மற்றும் மண்டல அளவிலான இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில் 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன. இதில் 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் பங்கேற்க உள்ளன. முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்

இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

பரிசுத்தொகை

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளின் முதல் 2 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. அதே போன்று இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹ 5,00,000, ₹ 3,00,000, ₹ 1,00,000, ₹ 50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.

கிராமிய கலை நிகழ்ச்சிகள்

இந்த திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம்பெறவுள்ளன.

வண்ண கோலப் போட்டி

மேலும் பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, மணி நடை, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து 33,000 ரொக்கப் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளது கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புடவை பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.