Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யுபிஐ பரிவர்த்தனை வரமா? சாபமா? ஒன்றிய பாஜ அரசின் வரி வேட்டை

* பல லட்சம் ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்

* சிக்கித் தவிக்கும் சிறு வியாபாரிகள்

* ஐ.டி, ஈ.டி.யும் பின்தொடரும் அபாயம்

‘‘வர்றவங்க எல்லாம் 100, 200 ரூபாய் நோட்ட கொடுத்தா என்ன பண்றது? சில்லறையா கொடுங்கம்மா...’’ - கடைக்காரர். ‘‘ஏடிஎம்-ல இப்படித்தான் வருது, என்ன பண்றது. எப்ப வந்தாலும் இப்படியே சொல்றீங்க... சரி, மொபைல்ல ஸ்கேன் பண்ணி போடறேன்’’ - வாடிக்கையாளர். எந்தக் கடையைக் கடந்து போனாலும் இந்த உரையாடல்களை தினமும் கேட்கலாம். ஒரு பக்கம் சில்லறைத் தட்டுப்பாடு; இன்னொரு பக்கம் வசதி, என்பது யுபிஐ பரிவர்த்தனைக்கு சாதகமாகி விட்டது. இது பெரிய வரம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடியாய் இறங்கியிருக்கிறது கர்நாடகா வியாபாரிக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ் விவகாரம். கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறிக் கடைக்காரர் ஷங்கர் கவுடா ஹடிமணி, தனக்கு வந்த ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீசைப் பார்த்து அரண்டு போய்விட்டார்.

‘4 ஆண்டுகளில் ரூ.1.63 கோடியை நீங்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்திருக்கீர்கள். இதற்கு ஜிஎஸ்டியாக ரூ.29 லட்சம் செலுத்த வேண்டும்’ என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்துக் கூறிய ஷங்கர் கவுடா, ‘‘விவசாயிகள்ட்ட இருந்துதான் காய்கறி வாங்கிட்டு வந்து விக்கிறேன். கடைக்கு வர்ற நிறையப்பேரு, சில்லறை இல்லன்னு ‘கியூ ஆர் கோட்’ -ஐ ஸ்கேன் செஞ்சு பணத்தை போட்டுடறாங்க. வர்ற வருமானத்துக்கு ஒழுங்கா வருமான வரி கூட கட்டிடறேன். காய்கறிக்கு ஜிஎஸ்டி கிடையாது என்பதால் ஜிஎஸ்டியில் நான் பதிவு செய்யவில்லை. ஆனாலும், யுபிஐ மூலமா வர்ற பரிவர்த்தனைய பார்த்து நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. இது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. அதுலேர்ந்து யுபிஐ மூலமா வாடிக்கையாளர்கள் கிட்ட பணம் வாங்கறத நிறுத்திட்டேன் ’’,என்றார், ஜிஎஸ்டி நோட்டீஸ் அதிர்ச்சியில் இருந்து அவர் மீளாமலேயே.

ஷங்கர் கவுடா மட்டுமல்ல, அவரைப்போலவே கர்நாடகாவில் மட்டும் சுமார் 14,000 வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் பறந்துள்ளது. எனவே, ஷங்கர் கவுடா மட்டுமல்ல, கர்நாடகாவில் உள்ள சிறு வியாபாரிகள் பலரும் முதல் வேளையாக தங்கள் கடையில் இருந்த யுபிஐ பரிவர்த்தனைக்கான கியூஆர் கோடு அட்டையை தூக்கி வீசி விட்டனர். ஸ்டிக்கர்களையும் கிழித்தெறிந்து விட்டனர். பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த சிறு வியாபாரிகளும், ‘ரொக்கமா கொடுத்து வாங்குங்க... இல்லேன்னா நடைய கட்டுங்க’ என்கிற அளவுக்கு இறங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, ஷங்கர் கவுடாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து மாநிலத்திலுள்ள அனைத்து சிறு வியாபாரிகளும், சேர்ந்து போராட்டமும் நடத்தினர். நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், எல்லாரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள் என்பதல்ல...

பயன்படுத்துவது எளிது, சில்லறை தட்டுப்பாட்டுப் பிரச்னைக்கு தீர்வு ஆகியவை தான் பிரதானக் காரணங்கள். இதில் சில இடங்களில் ஏமாற்று வேலைகள் நடந்தாலும், இதில் இருந்து வியாபாரிகளால் மீள முடியவில்லை. காய்கறிக் கடை, பூக்கடை, சிறிய மளிகைக்கடை, பெட்டிக்கடை தொடங்கி பெரிய மால்கள் வரை யுபிஐ பரிவர்த்தனைதான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. 50 ரூபாயாக இருந்தாலும், 500 ரூபாயாக இருந்தாலும் பெரும்பாலும் யுபிஐ பரிவர்த்தனைதான் செய்கின்றனர். இதன் காரணமாக, யுபிஐ பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. கடந்த 2021-22 நிதியாண்டில் 8,839 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், கடந்த 2023-24ல் 18,737 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 46 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை மேற்கண்ட அதே காலக்கட்டத்தில் 4,597 கோடியில் இருந்து 13,116 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், 70 சதவீதம் யுபிஐ பரிவர்த்தனை தான். சாதாரணமாகவே சிறு மளிகைக்கடைகளில் கூட பரிவர்த்தனைகள் ஒரு மாதத்திலயே லட்சங்களைத் தாண்டி விடும். பரிவர்த்தனைதான் லட்சங்களில் இருக்குமே தவிர, லாபம் சொற்பம்தான் என்கின்றனர் வியாபாரிகள். சிறு மளிகைக்கடைகள், காய்கறி, பழக்கடைகள் உட்பட சிறு வியாபாரிகள் எல்லாருமே, தினமும் அல்லது வாரந்தோறும் வியாபாரம் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் பொருள் வாங்கப் பயன்படுத்துகின்றனர். காய்கறி வியாபாரிகள், பூக்கடைகளைப் பொறுத்தவரை தினமும் வசூலாகும் பணம் மறு நாள் காலையில் முதலீடாக மாறி விடும். வாங்கிய காய்கறிகளை ஒரு சில நாளிலேயே விற்றால்தான் உண்டு. இல்லாவிட்டால் அழுகிப்போய் அத்தனையும் குப்பையில்தான் கொட்ட வேண்டும்.

மழைக்காலத்தில் வியாபாரம் முடங்கினாலும் இதே கதிதான். பூக்கடைகளின் நிலை இதை விட மோசம். வாங்கியதில் பெரும்பகுதியைக் குப்பையில் கொட்டும் நிலையைத்தான் வியாபாரிகள் சந்திக்கின்றனர். இதேபோல், ஒவ்வொரு வியாபாரத்திலும் ஒவ்வொரு பிரச்னையை வியாபாரிகள் சந்திக்கின்றனர். ஆனால், ஒன்றிய பாஜ அரசு ஜிஎஸ்டியை அறிமுகம் செய்ததில் இருந்து, ஒவ்வொரு மாதமும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதில் தான் படு தீவிரம் காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாதாந்திர வசூல் இவ்வளவு வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துச் செயல்படுகிறது. இதற்கேற்ப, வருவாய் ஆதாரங்களை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய பாஜ அரசு எடுத்து வருகிறது. இதற்கேற்ப விதிகளும், நடைமுறைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. விதிகள், நடைமுறைகள் நிர்ணயித்து வெளியிடும்போது அதன் பிரதான நோக்கத்தை பலரும் அறிவதில்லை.

ஆனால், வருமான வரி நோட்டீஸ் வரும்போதுதான் அதன் தீவிரத்தைப் பலரும் உணர்கின்றனர் என, இதுபோன்ற நிலையைச் சந்தித்த வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆண்டு வர்த்தகம் ரூ.40 லட்சத்தைத் தாண்டினால் வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயம் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் மேற்கண்ட பரிவர்த்தனைகளுக்கு வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் உதாரணம் தான். இதுபோன்ற பல உத்திகள், ஜிஎஸ்டி விதிகளின் அடிப்படையில் வரி வசூலிக்கும் அஸ்திரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரத்தில், பரிவர்த்தனையை மட்டுமே வைத்து லாபத்தை எடுத்துக் கொள்வது நியாயமான செயல் அல்ல என்பது வியாபாரிகள் தரப்பு வாதமாக உள்ளது. ‘‘நஷ்டம் அடையும்போது அதனை நாங்கள் தான் ஏற்கிறோம். இதுபற்றி ஜிஎஸ்டி அல்லது வருமான வரித்துறைக்குத் தெரிவதில்லை.

இந்த நஷ்டம் பரிவர்த்தனையில் வெளிப்படப்போவதில்லை. ஆனால், பரிவர்த்தனை அடிப்படையில் நோட்டீஸ் அனுப்புவதும் விளக்கம் கேட்பதும் எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. காய்கறி, பழம், பூ உள்ளிட்ட அழுகும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பால், தயிர் , மோர் போன்றவற்றுக்கும் ஜிஎஸ்டி கிடையாது. பெரும்பாலான காய்கறி, பழக்கடைகளில் இவை கூடுதலாக சேர்த்து விற்கப்படுகின்றன.

ஜிஎஸ்டி அதிகாரிகள் எந்தக் கடைக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை. வியாபாரத்தின் தன்மை பற்றியும் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், யுபிஐ பரிவர்த்தனை விவரங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து நோட்டீஸ் அனுப்புவதன் மூலம், அவர்களின் நோக்கம் வரி வசூல் மட்டுமே. இதற்கு யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை விவரங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

டிஜிட்டல் மயம் சில்லறை தட்டுப்பாட்டை போக்கவும், எளிதாகவும் இருந்ததால் எங்களுக்கு கிடைத்த வரமாக நினைத்தோம். ஆனால், அது எங்கள் வருமானத்தை அறிய அவர்களுக்கு பயன்படும் வசதி. எனவே இது வரமல்ல சாபம் என்று உணர்கிறோம். எங்கள் வர்த்தக விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கான வலை என்று இப்போதுதான் தெரிகிறது’’, என அவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் டிஜிட்டல் மயம் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப்போடும் புதிய வசதி என்பதற்குப் பதிலாக, வியாபாரிகளைப் புரட்டியெடுக்கும் ஆயுதம் என்பது வர்த்தகர்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கர்நாடகாவைப் போலவே பிற மாநிலங்களிலும் வணிகர்களைக் குறி வைத்து யுபிஐ பரிவர்த்தனை அடிப்படையில் அதிரடி சோதனையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் இறங்கக் கூடும். ஜிஎஸ்டியைத் தொடர்ந்து வருமானவரி (ஐ.டி), அமலாக்கத்துறை (ஈ.டி) ரெய்டுகள் வரலாம் என்ற அச்சம் வியாபாரிகளிடம் ஏற்பட்டுள்ளது.

எதிர்கொள்ளும் சிக்கல்கள்

சிறு வியாபாரிகள் பலர், வரித்துறையிடம் இருந்து வரும் நோட்டீசால் பெரிய அளவில் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்போதே, ஒரு இடத்தில் செலுத்திய வரியை இன்னொரு இடத்தில் செலுத்த வேண்டாம். அதனை இன்புட் வரி கிரெடிட்டாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதன்படி ஒரு வாடிக்கையாளர் பிஸ்கெட் வாங்கி விட்டு 10 ரூபாய்க்கு கியூஆர் கோட் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி விட்டுப் போய்விடுவார். ஆனால், வரி நோட்டீஸ் வந்த பிறகு சம்பந்தப்பட்ட வியாபாரி அந்த 10 ரூபாய்க்கான ஜிஎஸ்டி பில் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு கடையில் 30 பிஸ்கெட் பாக்கெட் தனித்தனியாக விற்கப்பட்டால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஜிஎஸ்டியுடன் கூடிய பில் தேவை. இதனை ஆடிட்டரிடம் தர வேண்டும். பணத்தை வாங்கி கல்லாவில் போட்டால் இதுபோன்ற சிக்கல்களைச் சந்திக்கவே தேவையில்லை என அப்பாவி சிறு வியாபாரிகள் அங்கலாய்க்கின்றனர்.

ஏடிஎம் நிபந்தனையின் நோக்கம் இதுதானா?

ஏடிஎம்-களில் மாதம் 8 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் 5 பரிவர்த்தனைகளும், பிற வங்கி ஏடிஎம்-களில் 3 பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளலாம். பணம் எடுப்பது மட்டுமின்றி மினி ஸ்டேட்மென்ட், இருப்பு பார்ப்பது ஆகியவற்றுக்கும் இது பொருந்தும். மாதச்சம்பளம் வாங்கும் பலர் அவ்வப்போது தேவைக்கேற்ப ஏடிஎம்-களில் பணம் எடுக்கின்றனர். இலவச பரிவர்த்தனை குறைக்கப்பட்டதும் பலர் யுபிஐ பரிவர்த்தனைக்கு மாறியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அரங்கேறும் மோசடிகள்

யுபிஐ பரிவர்த்தனையைப் பயன்படுத்தி சில மோசடிகளும் அரங்கேறுகின்றன. கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால், எவ்வளவு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை, ஸ்கேன் கருவியுடன் இணைந்த ஸ்பீக்கரில் கேட்டு வியாபாரிகள் தெரிந்து கொள்கின்றனர். சிறு கடை வைத்திருப்பவர்களுக்கு இது எளிதானதாக இருக்கிறது. ஆனால், ஸ்பீக்கர் கருவி இல்லாதவர்களிடம் போலி யுபிஐ ஆப்ஸ் காட்டி, பணம் அனுப்பப்பட்டு விட்டதாக ஏமாற்றும் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுகின்றன. இவை மிக அரிதான சம்பவம் என்றாலும், பாதிக்கப்படுவது அப்பாவி சிறு வியாபாரிகளே என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில இடங்களில் கியூ ஆர் கோட்-ஐ மாற்றி வைத்து பணத்தை வேறொரு நபர் சுருட்டிய சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

பணத்தையே பார்க்க முடியல...

டிஜிட்டல் பரிவர்த்தனை வந்த பிறகு பணத்தையே கண்ணில் பார்க்க முடியவில்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர். இது குறித்து சிலர் கூறுகையில், ‘‘பெரும்பாலானோர் யுபிஐ கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து பணத்தை போட்டு விடுகின்றனர். இதனால் கையில் பணமாக வருவதில்லை. வங்கிக்கு போய் விடுகிறது. அன்றாட வர்த்தக பயன்பாடுகளுக்கு எல்லா இடத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை கை

கொடுப்பதில்லை. ரொக்கமாக இருந்தால் மட்டுமே அவசர தேவைக்கு உபயோகிக்க முடிகிறது என்றார்’’.

கட்டணச் சுமை

டிஜிட்டல் வாலட்டில் இருந்து வியாபாரிக்கு வாடிக்கையாளர் பணம் அனுப்பினால் அதற்கு பரிமாற்றக் கட்டணமாக, 1.1 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. ரூ.2,000க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும். எனினும், இந்தக் கட்டணம் யுபிஐ மூலம் பணம் பெறும் வணிகர்களிடம் இருந்து தான் வசூலிக்கப்படுகிறது. இதுபோல், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், வணிகர்கள் இதுபோன்று பிரீபெய்டு வாலட் மூலம் பணம் செலுத்தும்போது பரிமாற்றக் கட்டணமாக 0.5 சதவீதம் முதல் 1.1 சிறு வியாபாரிகள் இந்தக் கட்டணத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கார்டு பரிவர்த்தனையுடன் போட்டி போட்டு வளர்ச்சி

உலக அளவில் யுபிஐ பரிவர்த்தனை முதலிடத்தைப் பிடித்துள்ளது, ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. சமீபத்திய ஆண்டறிக்கையின் படி, தினசரி மேற்கொள்ளப்படும் விசா கார்டு பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 63.9 கோடி. ஆனால், யுபிஐ பரிவர்த்தனை 64 கோடிக்கும் மேல் தாண்டி விட்டது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாதாந்திர யுபிஐ பரிவர்த்தனை

ஒவ்வொரு மாதமும் யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 1,839 கோடி பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளன. ரூ.24.03 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தை விட 32 சதவீதம் அதிகம். கடந்த 5 ஆண்டில், ஒவ்வொரு ஜூன் மாதமும் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் விவரம்:

யுபிஐ ஆப்ஸ்கள்

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்புக்குப் பிறகு, 2016 டிசம்பர் 30ம் தேதி பீம் எனப்படும் யுபிஐ செயலி முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. என்சிபிஐ (தேசிய பேமன்ட் கார்ப்போரேஷன் ஆப் இந்தியா) இதனை உருவாக்கியது. இதன் அடிப்படையில் தான் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனை வசதியை வழங்குகின்றன. வங்கிகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஐடிஎப்சி, பெடரல் வங்கி, யெஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி, ஆர்பிஎல் வங்கி, யூனிடி ஸ்மால் பைனான்ஸ் வங்கி உள்ளிட்டவை யுபிஐ பரிவர்த்தனையில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளன. கடந்த ஜூன் மாத நிலவரப்படி யுபிஐ பரிவர்த்தனை வசதியை வழங்கும் வங்கிகள், பிரீபெய்டு பேமென்ட், வங்கி சாரா நிறுவனங்கள் விவரம் வருமாறு.

யுபிஐ பரிவர்த்தனை வசதியை வழங்கும் வங்கிகள்

673

பிரீபெய்டு பேமென்ட் ஆப்ஸ்

28

வங்கி சாரா நிறுவனங்கள்

36

(அமேசான் பே, பஜாஜ் பின்சர்வ், கிரட், கூகுள் பே, பே டிஎம், போன் பே, சாம்சங் பே, வாஸ்ட்ஆப் உள்ளிட்டவை இதில் அடங்கும்.)