Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக செயல்படும் செங்கோட்டையனை இயக்குவது ஆர்எஸ்எஸ் அமைப்பா?.. பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக செயல்படும் செங்கோட்டையனை இயக்குவது ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், ஊழல் வழக்கில் சிறை சென்றவருக்கு ஆதரவாக செங்கோட்டையன் செயல்படுவதாக அதிமுகவினரும் குற்றம்சாட்டியுள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று திடீரென்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் கொடுத்தார். இதனால் 24 மணி நேரத்துக்குள் அவர் மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதோடு அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் பதவியும் பறிக்கப்பட்டது. இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.

அதற்கு காரணமாக கூறுவது சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதுதான். அதில், அதிமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படக் காரணம், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிறை செல்வதற்கு முக்கிய காரணமே சசிகலாதான் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். சொத்து குவிப்பு மூலம் பல ஆயிரம் கோடி சொத்துக்களை சசிகலா மற்றும் உறவினர்கள் வைத்துள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது அதிமுகவினருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதே சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள்தான். அவர்களைத்தான் தற்போது கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் குரல் கொடுக்கிறார். இதற்கு பின்புலமாக இருப்பது ஆர்எஸ்எஸ் அமைப்பு என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழலுக்கு எதிரான அமைப்பு என்று கூறப்படும் ஆர்எஸ்எஸ்சும், பாஜகவும் தற்போது ஊழல்வாதிகளை அதிமுகவில் சேர்க்க ஆதரவாக இருப்பதும் புரியாத புதிராக இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரத்தில் செங்கோட்டையன், தன்னை மேற்கு மண்டலத்தில் முக்கியத் தலைவராக விளங்கிய செழியனுடன் ஒப்பிட்டுப் பேசினார். ஆனால் செழியன், தனது சொத்துக்களை எல்லாம் மக்களுக்காக இழந்தவர். ஆனால் செங்கோட்டையன் மக்கள் பெயரைச் சொல்லி சொத்துக்களை வாங்கி குவித்தவர். இரண்டு தலைவர்களும் எப்படி ஒன்றாக முடியும் என்கின்றனர் அதிமுக தலைவர்கள். அதேநேரத்தில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக உள்ளார். அவரை தங்கள் விருப்பப்படி வளைக்க முடியவில்லை. தேர்தல் நேரத்தில் சீட் விவகாரத்திலும் அவர் பிடிவாதமாக நடந்து கொள்கிறார்.

இதனால் அவரை தங்கள் விருப்பப்படி வளைக்க வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் இருந்தால்தான், அவர்கள் மூலம் கட்சியை தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்க முடியும் என்று பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கருதுகிறது. இதனால் அவர்களை எப்படியாவது கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டு, தேர்தலில் வெற்றி பெற அவர்கள் கண்டிப்பாக வேண்டும் என்று பேச வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவர்தான் செங்கோட்டையன். அவர் தற்போது வாய்ஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கையில் எடுத்தனர். பின்னர் எப்படியோ சசிகலாவை ஓரங்கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்து வைத்தனர்.

தங்களால் ஓரங்கட்டப்பட்ட சசிகலாவை சேர்க்க பாஜ தற்போது துடிப்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், பாஜவை நம்பி வெளியில் வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது திக்குத்தெரியாத காட்டில் தவித்து வருகிறார். தற்போது பன்னீர்செல்வத்தைப் போல செங்கோட்டையனை பாஜ களம் இறக்கியுள்ளது. அவரும் பதவிகளை இழந்துள்ளார். செங்கோட்டையனைப் போல மேலும் 2 தலைவர்கள் மேற்கு மண்டலத்தில் உள்ளார்களாம். முன்னாள் அமைச்சர்களான அவர்களை விரைவில் பாஜ இதேபோல கலகக் குரல் எழுப்ப பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் திட்டமிட்டுள்ளதாம். இதனால் விரைவில் அவர்கள் இந்த பிரச்னையை ஓரிரு நாளில் எழுப்புவார்கள் என்கின்றனர் பாஜ தலைவர்கள். ஆனால் அவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசியமாக டீல் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அடுத்தடுத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை தங்கள் வசப்படுத்துவார்களா அல்லது எடப்பாடி பழனிசாமி அவர்களை எல்லாம் வீழ்த்துவாரா என்ற பரபரப்பு அதிமுகவில் தற்போது எழுந்துள்ளதாக கருதுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.