Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தானால் ஒருங்கிணைக்கப்படும் ‘இஸ்லாமிய நேட்டோ’ அமைப்பால் இந்தியாவுக்கு ஆபத்தா..? சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு

புதுடெல்லி: பாகிஸ்தான் முன்னெடுக்கும் இஸ்லாமிய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு திட்டம், இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, ‘நேட்டோ’ படைக்கு (வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டணி) நிகரான ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தோஹாவில் 40க்கும் மேற்பட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பாகிஸ்தான், ‘அரபு-இஸ்லாமிய கூட்டுப் படை’ ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக முன்வைத்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஆகியோர் இந்தக் கருத்தை ஆக்ரோஷமாக முன்னெடுத்தனர். ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பாகிஸ்தானின் இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு வலுசேர்த்தது. இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டால், அது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நலன்களுக்கு பெரும் சவாலாக அமையும் என கருதப்படுகிறது.

அணு ஆயுத பலம் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடான பாகிஸ்தான், இந்த அமைப்பின் மூலம் மேலும் பலம் பெற்று இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக்கூடும். குறிப்பாக, ‘ஓர் உறுப்பினர் மீதான தாக்குதல், அனைவர் மீதான தாக்குதலாகக் கருதப்படும்’ என்ற ‘நேட்டோ’ விதியைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான தனது நடவடிக்கைகளுக்குக் கூட்டமைப்பின் பாதுகாப்பைப் பெற பாகிஸ்தான் முயலலாம். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் பாகிஸ்தானும், துருக்கியும், இந்த அமைப்பின் மூலம் தங்களது பொய்ப் பிரசாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

அதேநேரம், இஸ்ரேலுடன் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளைப் பேணிவரும் இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய அரபு நாடுகளுடனும் வலுவான நட்புறவைக் கொண்டுள்ளது. எனவே, இஸ்ரேல் எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்துடன் இந்த ராணுவக் கூட்டமைப்பு உருவானால், அது இந்தியாவின் ராஜதந்திர சமநிலைக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.