பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா காரை பிரிவில் போக்குவரத்து இடையூறாக வாகனங்களை மறித்து போலீசார் சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட இரூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் மேம்பாலத்தை பயன்படுத்தி வந்த வாகனங்கள் அனைத்தும், அருகே உள்ள சர்வீஸ் சாலையில் செல்லும்படி போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் காரை பிரிவில் தினமும் மாலை நேரங்களில் பாடாலூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது, இந்த சர்வீஸ் சாலை வழியாக காரை, கொளக்காநத்தம், காரை, புதுக்குறிச்சி, தெரணி, இரூர் ஆகிய கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்படும். இந்தநிலையில் இன்று மாலை காரை பிரிவில் பாடாலூர் போலீஸார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். மேலும், விதிமுறையை மீறியவர்களிடம் அபராதம் வசூல் செய்து வந்தனர். இதனால் சென்னை-திருச்சி சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததுடன், சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாடாலூர் ஆய்வாளர் சண்முக சுந்தரம், பெரம்பலூர் போக்குவரத்து ஆய்வாளர் கிள்ளிவளவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. அதிவிரைவுப் படை போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.