இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும்: பக்தர்களுக்கு ரயில்வே பரிசு; 24 மணி நேரமும் மேல்மருவத்தூருக்கு ரயில்
சென்னை: இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை 57 ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கி தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி காவடி எடுத்துக்கொண்டு மேல்மருவத்தூர் ஆலயத்திற்கு வருகின்றனர். குறிப்பாக தைப்பூச திருவிழா காலத்தில் கூட்டம் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, சிதம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இருந்து பஸ்களில் வர வேண்டிய சிரமத்தை போக்க இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது.
எல்லா திசைகளிலும் இருந்தும் வசதி ரயில்வே சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் இருந்து,டெல்லியின் ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து திருக்குறள் மற்றும் சாம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்,பனாரசில் இருந்து காசி தமிழ் எக்ஸ்பிரஸ், அயோத்யா வழியாக வரும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள்,ஜோத்பூர், பிகானேரில் இருந்து ஹம்சாபர் மற்றும் அனுவ்ரத் எக்ஸ்பிரஸ் பிரோஸ்பூரில் இருந்து வரும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். மேற்கு இந்தியாவில் இருந்து, மும்பையின் லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து கரைக்கால் மற்றும் மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள்,கிழக்கு இந்தியாவில் இருந்து புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரி சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
தமிழகத்திற்குள்,சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சேலம் செல்லும் அனைத்து முக்கிய ரயில்களும்,தாம்பரம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோல்லம் வழித்தடங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். தமிழகத்தின் பெருமைமிக்க வைகை சூப்பர்ஃபாஸ்ட் (பகல் 3.04 மணி மற்றும் மதியம் 12.14 மணி) மற்றும் பாண்டியன் சூப்பர்ஃபாஸ்ட் (இரவு 11.04 மணி மற்றும் அதிகாலை 3.19 மணி) ஆகியவை மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இந்த ரயில்கள் வழக்கமாக சிறிய நிலையங்களில் நிற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* 24 மணி நேரமும் சேவை
அதிகாலை 12.44 மணி முதல் இரவு 11.54 மணி வரை பல்வேறு நேரங்களில் ரயில்கள் நிற்கும். குறிப்பாக
அதிகாலை (1-6) மணி வரை 15 ரயில்கள்
காலை (6-12 ) மணி வரை 12 ரயில்கள்
மதியம்/மாலை (12-6 ) மணி வரை 14 ரயில்கள்
இரவு (6-12 ) மணி வரை 16 ரயில்கள்
ஒவ்வொரு ரயிலும் ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். கதவு அருகில் சாமான்களுடன் காத்திருந்து, ரயில் நின்றவுடன் விரைவாக இறங்க வேண்டும். ஏறுபவர்களும் தயாராக நின்று கொண்டிருக்க வேண்டும்.இந்த சிறப்பு நேர அட்டவணை டிசம்பர் 31 வரை மட்டுமே. புத்தாண்டுக்குப் பிறகு, ஜனவரி 1, 2026 முதல் திருத்தப்பட்ட நேர அட்டவணை அமலுக்கு வரும். அதற்கான விவரங்கள் தனியாக அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
* பக்தர்களுக்கு மகிழ்ச்சி
இதுவரை சிதம்பரத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்து 30 கிலோமீட்டர் பயணம் செய்து வர வேண்டிய கஷ்டம் இனி இல்லை. ரயிலிலேயே நேரடியாக மேல்மருவத்தூர் வந்து விடலாம்\\\\” என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இப்போதே டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம். மேல்மருவத்தூர் நிலையத்தில் இறங்குவதாக தெளிவாகக் குறிப்பிட்டு டிக்கெட் எடுக்க வேண்டும்.


