Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தா.பேட்டை அருகே வடமலைப்பட்டி பாசன ஏரி தூர்வாரப்படுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

முசிறி : தா.பேட்டை பேரூராட்சியில் உள்ள வடமலைபட்டி பாசன ஏரியில் காடுபோல் வளர்ந்து நிற்கும் மரங்களை அகற்றி தூர் வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தா.பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட வடமலைப்பட்டியில் பாசன ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியில் இருந்து நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரியில் தற்போது சிறிதளவு தண்ணீர் உள்ளது.

இதுகுறித்து தா.பேட்டையை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவர் கூறும்போது, வடமலைப்பட்டி பாசன ஏரி தண்ணீர் நிரம்பும்போது இப்பகுதி சுற்றி உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஏனென்றால் தா.பேட்டை ஒன்றிய பகுதி விவசாயிகள் மழைநீர் மற்றும் கிணறு, போர்வெல் தண்ணீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர்.

இந்த ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது மூன்று போகம் விவசாயம் செய்ய முடியும். இது தவிர நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் ஊற்று வழியாக அதிகரிக்கும். குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லிலும் தண்ணீர் மட்டும் உயரும். இதனால் குடிநீர் தேவையும் தீர்க்கப்படும். இந்த ஏரி தண்ணீர் நிரம்பி அடுத்தடுத்த ஊர்களுக்கு செல்லும் பொழுது அந்தந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பயன்பெறுகின்றனர்.

தற்போது ஏரியில் சீமை கருவேல முள் மரங்கள் மிகுதியாக வளர்ந்துள்ளது. அதனை தண்ணீர் வடிந்தவுடன் அகற்றிவிட்டு ஏரியை தூர் வார வேண்டும். ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் ஏரியை தூர்வாரினால் மழைக்காலத்தில் தேவையான தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்த முடியும்.

எனவே மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை ஏரிக்கு நேரில் அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். நீர்பாசனம் குறித்து தா.பேட்டையை சேர்ந்த விவசாயி கந்த சுப்ரமணியன் என்பவர் கூறும்போது,தா.பேட்டை ஒன்றியம் வானம் பார்த்த பூமி ஆகும். மழை நீரை நம்பியே விவசாயம் உள்ளது.

மழை நீரை சேமிப்பதன் வாயிலாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி அதன் வழியே விவசாய பணிகள் செய்வது வழக்கம். ஆற்றுப் பாசனம் இப்பகுதியில் இல்லாததால் விவசாயிகள் பெரும்பாலும் மானாவாரி சாகுபடியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. எனவே தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி குளங்களை தூர்வார வேண்டும். மேலும் வரத்து, வாய்க்கால்கள் பல இடங்களில் தூர்ந்து மழைநீர் குளம் ஏரிகளுக்கு வருவது தடைபடும் நிலையில் உள்ளது.

ஏரி, குளங்களுக்கு வரும் நீர்ப்பாசன வழித்தடங்கள் என்பது உடலில் உள்ள ரத்த நாளங்கள் போன்றது. ரத்த நாளங்கள் தடைபட்டால் உடல் பாதிக்கப்படும். அதுபோல வரத்து வாய்க்கால்கள் அடைபட்டால் ஏரி குளங்களுக்கு வரும் தண்ணீர் வரத்து தடைபடும்.

இதனால் ஏரியில் தண்ணீரை சேமிக்க இயலாமல் போகிறது. மழைநீர் வீணாவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பும் தடைபடும். எனவே தா.பேட்டை ஒன்றியத்தில் அரசு துறை அலுவலர்கள் நீர்வழி தடங்களை சீரமைக்க அரசிடம் உரிய நிதி பெற்று பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறினார்.