Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பானி குடும்பம் நடத்தி வரும் ‘வன்தாரா’ விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் முறைகேடு?.. எஸ்ஐடி குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி: வன்தாரா விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் நடக்கும் முறைகேடுகள், விலங்குகள் கடத்தல் மற்றும் பண மோசடி புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் ஆனந்த் அம்பானியால் உருவாக்கப்பட்ட வன்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு எதிராக வழக்கறிஞர் சி.ஆர்.ஜெய சுகின் உள்ளிட்ட இருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், வன்தாரா மையம் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சட்டவிரோதமாக விலங்குகளை, குறிப்பாக யானைகளை வாங்கியதாகவும், விலங்குகளை மிக மோசமாக நடத்துவதாகவும், நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

கோயில்கள் மற்றும் தனியார் உரிமையாளர்களிடமிருந்து யானைகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதாகவும், சில அழிந்துவரும் உயிரினங்கள் சர்வதேச அளவில் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், 36 வயதான மகாதேவி (மதுரி) என்ற யானை, வன்தாராவுக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டது குறித்தும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று பிறப்பித்த உத்தரவில், வன்தாராவின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து உத்தரவிட்டது.

இந்தக் குழுவில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திர சவுகான், முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர் ஹேமந்த் நக்ரலே மற்றும் ஐஆர்எஸ் அதிகாரி அனிஷ் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விலங்குகள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான விதிகள், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், சர்வதேச விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்தும், வனவிலங்கு கடத்தல், நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடி புகார்கள் குறித்தும் இந்தக் குழு விசாரிக்கும். இந்த விசாரணை குழு உண்மையறியும் நடவடிக்கை மட்டுமே செயல்படும். இந்த உத்தரவு வன்தாரா மீதான தீர்ப்பு அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 12ம் தேதிக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.