இரும்பை முதன்முதலாக பயன்படுத்தி முன்னோடியாக திகழும் தமிழகம் ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகில் முன்னோடியாக இருப்போம்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து விசாரணைக் கைதியாக புழல் சிறையில் உள்ள போலீஸ் பக்ரூதின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா, சிறை அறையில் உள்ள கேமராக்களை ஆப் செய்து விட்டு, போலீஸ் பக்ரூதின் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் மூடப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தததற்காக அவர் தற்போது பழிவாங்கப்படுகிறார் என்றார்.
சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீஸ் பக்ரூதின் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை. அவருக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளே தவறிழைப்பவர்களாக மாறி குற்றவாளியாக இருந்தாலும் கூட அவர்களை மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும். சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்.
இரும்பை முதன்முதலாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி என்று பெருமைப்படும் நேரத்தில், ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து, மதியம் போலீஸ் பக்ரூதினை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, மதியம் 2.15 மணிக்கு போலீஸ் பக்ரூதின் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவர், தன்னை தனிமைச் சிறையில் தான் அடைத்துள்ளனர். சிறையில் தனக்கு நடப்பதை நீதிமன்றத்தில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று சிறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஜனவரி 27ம் தேதி போலீஸ் பக்ரூதினை நேரில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
* குற்றவாளிகளுக்கு பட்ட பெயர் வேண்டாமே
வழக்கு விசாரணையின்போது அவருக்கு போலீஸ் பக்ரூதின் என்ற பெயர் எப்படி வந்தது என்று விளக்கமளிக்க உள்ளதாக சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அவர்களுக்கு அவ்வாறு பெயர் வைப்பதே காவல்துறைதான். பாம் சரவணன், பாம்பு நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே அச்சமாக உள்ளது. இது போன்ற பெயர்கள் வைப்பதால் சமூகத்தில் அவர்களுக்கான நற்பெயர் பாதிக்கப்படுகிறது. எனவே இது போன்று பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.


