இரிடியம் மோசடி, ஹவாலா விற்பனை விவகாரம் அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி 9 மணி நேரம் சோதனை: விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
வேலூர்: அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரிடியம் விற்பனை விவகாரம் தொடர்பாக 9 மணி நேரம் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் இரிடியம் மோசடி, ஹவாலா பணம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஜெயராஜ் (54). இவர் அரசு மற்றும் தனியார் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார்.
இவர் இரிடியம் விற்பனை செய்வதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் 5க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் காட்பாடியில் உள்ள ஜெயராஜுக்கு சொந்தமான சொகுசு பங்களாவிற்கு சென்று சோதனையை தொடங்கினர். காலை 6 மணி முதல் மாலை 3.30 மணி வரை 9.30 மணி நேரம் நடந்த சோதனை மற்றும் விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வீட்டில் இருந்த ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து விசாரணைக்காக ஜெயராஜை அழைத்துக் கொண்டு சிபிசிசிஐடி போலீசார் சென்னைக்கு கார்களில் புறப்பட்டு சென்றனர். இந்த விசாரணையை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் உள்ள மூர்த்தி என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இவர் வாலாஜா ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் உள்ளார். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் மாற்று உடையில் வந்து அதிரடியாக மூர்த்தி வீட்டில் நுழைந்து 3 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதிமுக பிரமுகர் மூர்த்தியை விசாரணைக்காக காரில் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
* ரூ.50 கோடி மோசடி வழக்கில் அறக்கட்டளை நிறுவனர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (55). சவரிமுத்து அருள்தாஸ் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்த இவர், பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல ஆண்டுகளாக நிதி திரட்டி வந்தார். ஆனால் அவர், பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள், புதுக்கோட்டை சிபிசிஐடியில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ரவிச்சந்திரன் மீண்டும் பொதுமக்களிடமிருந்து நிதிவசூல் செய்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் சிபிசிஐடியில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் பெரம்பலூர் சிபிசிஐடி போலீசார், குடுமியான் மலையில் உள்ள ரவிச்சந்திரன் வீடு, அலுவலகம், உறவினர்கள், பணியாளர்கள், வீடுகளில் நேற்று காலை 11.15 முதல் 12.15 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் 2 டைரி, 2 சீல்கள், காசோலைகள், பாஸ்போட்கள், வங்கி கணக்குகள் என 30 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. தஞ்சாவூர் சிபிசிஐடி போலீசார் காரைக்குடியில் தங்கியிருந்த ரவிச்சந்திரனை கைது செய்து புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், தமிழகம் முழுவதும் பொது மக்களிடமிருந்து இதுவரை ரூ.50 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.