டப்ளின்: அயர்லாந்து நாட்டில் இந்தியர் ஒருவர் ஆடைகளை களைந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் உள்ள டல்லாட் பகுதியில் 40 வயது இந்தியர் அங்குள்ள பார்க்கில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரது ஆடைகளை களைந்து முகம், கை, கால்களில் சரமாரியாக தாக்கியது. இதில் அவரது உடலின் பல பாகங்களில் ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர் டல்லாட் பல்கலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஐரிஷ் தேசிய காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இனவெறி தொடர்பான தாக்குதலா இது என்ற அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அயர்லாந்திற்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டதும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இந்தியரை உடனடியாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த அயர்லாந்து மக்களுக்கும், பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். தாக்கப்பட்ட இந்தியர் மூன்று வாரங்களுக்கு முன்புதான் அயர்லாந்திற்கு சென்றது தெரிய வந்துள்ளது.