நியூயார்க்: ஈரானின் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஈரானுடன் பெட்ரோலிய வர்த்தகம் செய்வது அதன் அணுசக்தி திறனை அதிகரிப்பதற்கு நிதி உதவி செய்வதாக அமெரிக்கா கூறி வருகின்றது. மேலும் இது தீவிரவாத குழுக்களுக்கு வலிமையை கொடுப்பதாகவும், சர்வதேச கடல் வழி வர்த்தகத்தை , கடல்வழி போக்குவரத்தை பாதிக்கும் என்றும் அமெரிக்கா கூறுகின்றது. எனவே ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் ஈரானின் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்தியா, பனாமா, சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள 17 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த சையர் ஹூசைன் இக்பால் ஹூசைன் சையத், சுல்பிகர் ஹூசைன் ரிஸ்வி சையத், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆர்என் ஷிப் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் புனேவை சேர்ந்த டிஆர்6 பெட்ரோ இந்தியா எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.


