‘நாங்கள் நினைத்தால் ஒரு டிரோனை அனுப்பி போட்டு தள்ளிவிடலாம்’ அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் பகிரங்க கொலை மிரட்டல்
ஈரான்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. அதே நேரத்தில் ஈரான் மீது அமெரிக்காவும் வான்வெளி தாக்குதல் நடத்தியது. தற்போதைய நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையிலான தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது ஈரான் மக்களும் ஈரான் அதிகாரிகளும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சூழலில் ஈரான் தலைவர் அயதுல்லா கமேனியின் பிரதான ஆலோசகரான ஜாவத் லாரிஜினி தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில், ‘அமெரிக்காவின் புளோரிடாவில் ஒரு ஆடம்பர பங்களா இருக்கிறது.
அதில்தான் டிரம்ப் அடிக்கடி தங்குவார். அங்குதான் சூரிய குளியல் எடுப்பார். இது எங்களுக்கு தெரியும். நாங்கள் நினைத்தால் அந்த சமயத்திலேயே ஒரு டிரோனை அனுப்பி அங்கேயே கொலை செய்யலாம்’ என்று கூறியிருக்கிறார். டிரம்ப் மீது ஈரான் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். டிரம்பை கொலை செய்ய வேண்டும் என ஈரானில் ஆன்லைன் பரப்புரையே நடைபெறுகிறது. இதற்காக நிதியும் திரட்டுகிறார்களாம். ஜூலை 7ம் தேதி வரை டிரம்பை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக 27 மில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாம். 100 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டுவதை இலக்காக கொண்டிருக்கிறார்களாம்.
டிரம்பை யார் கொலை செய்கிறார்களோ அவருக்கு இந்த 100 மில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் டிரம்பை கொலை செய்வோம் என ஈரான் மூத்த அதிகாரி தெரிவித்திருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.