அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் விருப்பத்தை நிராகரித்தது ஈரான்!!
டெஹ்ரான் : அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பின் விருப்பத்தை ஈரான் உச்ச தலைவர் காமேனி நிராகரித்துள்ளார். தங்களின் அணுசக்தி திறன்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக கூறுவதை காமேனி மறுத்துவிட்டார். ஈரான் ரகசியமாக அணுகுண்டுகளை உருவாக்க முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இதனை மறுத்து வரும் ஈரான், தனது அணுசக்தி திட்டம், எரிசக்தி நோக்கங்களுக்கானது மட்டுமே என்று கூறி வருகிறது.
இதன் பின்னணியில் அணு ஆயுதங்களை ஈரான் வாங்குவதையோ அல்லது உருவாக்குவதையோ தடுக்கும் வகையில், ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்தது. இதனை நோக்கமாக கொண்ட அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே 5 கட்ட மறைமுக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்தன. ஆனால் திடீரென கடந்த ஜூன் மாதம் ஈரான் - இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதல் போராக உருமாறியது. அப்போது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகளை வீசி அழித்தன. அத்துடன் அணு விஞ்ஞானிகள் சிலரையும் இஸ்ரேல் உளவுப்படை கொலை செய்தது. அந்த 12 நாள் போரை தொடர்ந்து, அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உரையாற்றிய அந்நாட்டின் உச்ச தலைவர் காமேனி, மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் விருப்பத்தை நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பை தரகர் அல்லது பேரம் பேசுபவர் என்று விமர்சனம் செய்துள்ள ஈரான் உச்ச தலைவர் காமேனி, ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலோடும் முன்மொழிவோடும் இருந்தால் அது, திணிப்பும் மிரட்டலும் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.