சண்டிகர்: அரியானாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரான் குமார் சண்டிகரில் தனது இல்லத்தில் கடந்த செவ்வாயன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். புரான்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய கடிதத்தில், அரியானா டிஜிபி சத்ருஜித் கபூர், ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி வரும் புரான் குமாரின் மனைவி அம்னீத் , தனது கணவரின் தற்கொலைக்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றம்சாட்டியதோடு அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் உட்பட 8 மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்து வந்தார்.
இதனை தொடர்ந்து ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சுரீந்தர் சிங் போரியா புதிய ரோஹ்தக் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். பிஜர்னியாவின் பணியிட உத்தரவு தனித்தனியாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.