மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு வாங்கி உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில், 5 முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மோசமாக ஆடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (ஆர்ஆர்) மோசமான தோல்விகளை எதிர்கொண்டது.
அதனால் தங்கள் அணிகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த இரு அணிகளும், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களை பறிமாறிக் கொள்வது குறித்து தீவிர பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. அதேபோல், ஜடேஜாவை, ரூ. 14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி உள்ளது.
இது தொடர்பாக, எக்ஸ் வலைதளத்தில் அந்த அணி நிர்வாகம் ஜடேஜாவை வரவேற்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது. ஆர்ஆர் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல்லில் அனுபவம் மிக்க வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். சாம்சனுக்கு மாற்றாக, ரவீந்திர ஜடேஜாவும், சாம் கர்ரனும், சிஎஸ்கேவில் இருந்து ஆர்ஆர் அணிக்கு மாறியுள்ளனர். சாம் கர்ரனுக்கு, ரூ. 2.4 கோடி அளிக்க ஆர்ஆர் ஒப்புக் கொண்டுள்ளது.
தவிர, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி, ரூ. 10 கோடிக்கு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு இடம்மாறி உள்ளார். மேலும் மும்பை அணியில் இருந்து சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனை, ரூ. 30 லட்சத்துக்கு லக்னோ வாங்கியுள்ளது. ஆர்ஆரிடம் இருந்து நிதிஷ் ராணாவை, டெல்லி கேபிடல்ஸ் அணி, ரூ. 4.2 கோடிக்கு பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் இருந்து, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் டொனோவான் பெரேரா, ரூ. 1 கோடிக்கு, ஆர்ஆர் அணிக்கு சென்றுள்ளார்.


