மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 2025 சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவ. 24, 25 தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 204 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க 1574 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 1165 இந்திய வீரர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகளின் கேப்டன்களாக இருந்த ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் உள்பட 23 இந்திய வீரர்கள் ரூ2 கோடி அடிப்படை விலை பிரிவில் பட்டியலிடப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான் அணியால் விடுவிக்கப்பட்ட ஆர்.அஷ்வின், சாஹல், காயத்தால் ஓய்வில் இருக்கும் முகமது ஷமி ஆகியோரும் இந்த பிரிவில் உள்ளனர். கடந்த முறை ஏலத்தில் விலைபோகாத பிரித்வி ஷா, சர்பராஸ் கான் ரூ75 லட்சம் அடிப்படை விலை பிரிவில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
* 2024 சீசனில் விளையாடாத இங்கிலாந்து நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் இந்த முறையும் விலகியுள்ளார்.
* சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் (42 வயது), ரூ1.25 கோடி அடிப்படை விலை பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
* 10 அணிகளும் அதிகபட்சமாக தலா 25 வீரர்களை கொண்டிருக்கலாம். இந்த அணிகள் ஏற்கனவே 46 பேரை தக்கவைத்துள்ள நிலையில், 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளன. துபாயை தொடர்ந்து சவுதியில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.