முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஓசூர் பயணம்: ரோடுஷோ நடத்துகிறார்; நாளை கிருஷ்ணகிரியில் அரசு விழாவில் பங்கேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரோடுஷோவும் நடத்துகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழன்) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்கிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்தை வந்தடைகிறார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து, ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலசில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். பின்னர், அங்கிருந்து பிற்பகல் 12.50 மணிக்கு எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதிய உணவை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணி அளவில் சூளகிரி பஸ் நிலையம் முதல், தேசிய நெடுஞ்சாலை வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 4.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தை வந்தடைகிறார்.
அங்கு 5 மணிக்கு புதிய தொழிற்சாலை தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரியை வந்தடைகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகில் கட்சியினர் வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இரவு கிருஷ்ணகிரியில் தங்குகிறார். நாளை (12ம் தேதி) காலை 10.15 மணிக்கு, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் அவர், விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.விழா மேடைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கல்லில் உறைந்த வரலாறு, கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிடுகிறார். பின்னர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படத்தை திரையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, வேப்பனஹள்ளி ஒன்றியம், மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மாவிற்கு கலைஞர் கனவு இல்ல ஆணையையும், செயற்கை கைகளையும் முதல்வர் வழங்குகிறார்.
பின்னர், கார் மூலமாக ஓசூர் புறப்பட்டு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி, நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாலைகளின் இருபுறமும் திமுக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகிறது. முதல்வரை வரவேற்பதற்காக கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதல்வர் வருகையை முன்னிட்டு, கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், சேலம் சரக டிஐஜி(பொ) அனில்குமார் கிரி, கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் என மொத்தம் 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.