2030 ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிவேக பாய்ச்சலில் பயணித்து வருகின்றார். உள்நாட்டு தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க செய்யும் அதே வேளையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
தொழில் மயமாக்கலில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகின்றது. வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியானது அனைத்து பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக தொழில்துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதியானது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் உற்பத்தி துறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 விழுக்காடாக இருந்து வருகின்றது. மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் முதலிடத்தையும், ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. தமிழ்நாடு திறன்மிக்க பணியாளர்களை பெற்றிருப்பதால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 25 முன்னணி நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் மூலம் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
டிஎன் ரெயிசிங் ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின் போது, இந்துஜா குழுமம் தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டும் ரூ.5,000 கோடிக்கு முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 1,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்துஜா குழுமத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாட்டில் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்புகளை நிறுவிட இக்குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களுக்களுக்கான உலகளாவிய தலைநகராக தமிழ்நாடு உருவாக உள்ளது.
இதே போல கடந்த 2 ஆண்டுகளில் 3வது தொழில் முதலீட்டை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் நுட்ப மையத்தை (ஜி.ஐ.டி.சி.) ரூ.176 கோடி முதலீட்டில் வரிவாக்கம் செய்திட தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதலமைச்சரின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என மொத்தம் ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 17,813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வரின் தீவிர முயற்சியால் உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை செய்து வருகின்றன. இதன் மூலம் உலக அளவில் தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக மட்டுமல்லாது, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகவும் தமிழ்நாடு விளங்கி வருகின்றது.