மதுரை: மதுரை, யாகப்பா நகரை சேர்ந்த தினேஷ்குமார்(24), அஜித்கண்ணா மற்றும் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் உள்ள திடல் அருகே 3 பேரையும் பிடித்து ஒரு வழக்கின் விசாரணைக்காக அண்ணாநகர் போலீசார் அழைத்துச் சென்றனர். டோல்கேட் பகுதியிலுள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து 3 பேரையும் விசாரித்த நிலையில், மேல் விசாரணைக்காக அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதற்காக வாகனத்தில் ஏற்றினர். அப்போது திடீரென தினேஷ்குமார் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், தினேஷ்குமாரை துரத்தி சென்றுள்ளனர்.
அப்போது தினேஷ்குமார் வண்டியூர் கால்வாயை தாண்டும் வகையில் தாவி குதித்துள்ளார். அப்போது கால்வாய் நீருக்கு அடியில் இருந்த சகதியில் சிக்கி மூச்சுத்திணறி பலியானார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கியதால் தினேஷ்குமார் இறந்ததாக கூறி, அவரது குடும்பத்தினர், உறவினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து காவல் நிலையம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.