விசாரணையின்போது சிறுவன் உயிரிழந்த வழக்கு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டு காவலருக்கு 11 ஆண்டு சிறை: எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை; மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மதுரை: போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணமடைந்த வழக்கில், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டு, போலீஸ்காரருக்கு தலா 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுரை, கோச்சடையைச் சேர்ந்த ஒருவரின் 17 வயது மகன், 10ம் வகுப்பு வரை படித்தவர். மேற்கொண்டு படிக்காமல், கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் நகை திருடு போனது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக சிறுவனை, மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கடந்த 2019ல் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீசார் கடுமையாக தாக்கியதால்தான் சிறுவன் உயரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவனின் சிறுநீரகங்கள் மற்றும் உள் உறுப்புகளில் கடுமையான காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கில், மறுபிரேத பரிசோதனை செய்யவும், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றியும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதன்பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து மதுரை நீதிமன்றத்தில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சிறப்பு பிரிவு எஸ்ஐ ரவிச்சந்திரன், ஏட்டு ரவிச்சந்திரன் மற்றும் முதல்நிலை காவலர் சதீஷ்குமார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி ஆர்.ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பளித்தார். காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி, ‘‘சட்டவிரோதமாக அடைத்து வைத்த குற்றத்திற்காக 4 பேருக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை, கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என 11 ஆண்டு சிறைத் தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்’’ என்றும், தலா ரூ.48 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
மேலும், ‘‘இந்த வழக்கில் ஆதாரங்களை அழிக்க உடந்தையாக இருந்த எஸ்.எஸ்.காலனி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ கண்ணன், இன்ஸ்பெக்டராக இருந்த அருணாச்சலம், குற்றப்பிரிவு எஸ்ஐ பிரேம்சந்திரன் ஆகியோர் கூடுதல் எதிரிகளாக சேர்க்கப்படுகின்றனர். அவர்களது குற்றம் குறித்து விசாரித்து கூடுதல் இறுதி அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதை எஸ்பி அந்தஸ்திற்கு குறையாத அதிகாரி மேற்கொள்ள வேண்டும். இவர்களில் தற்போது பணியிலுள்ள இன்ஸ்பெக்டர் அருணாசலத்தை விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினருக்கு உதவும் நோக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளாத அப்போதைய சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த சிறுவனின் காயங்களை மறைத்து, அவருக்கு வெளிக்காயங்கள் இல்லையென தவறாக பதிவேடு வழங்கிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயக்குமார், பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை போலீசாரிடம் வழங்கிய டாக்டர் ஸ்ரீலதா ஆகியோர் மீது, மருத்துவ கல்வி இயக்குநர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.