கோபி: எடப்பாடி டெல்லி சென்ற நிலையில் முதல்வரை சந்தித்தால் அரசியலாக்கப்படும் என்பதால் சந்திப்பை தவிர்த்ததாக செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி பகுதியில் புதிதாக சாய ஆலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கே.ஏ.செங்கோட்டையன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்நுட்ப குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் சங்கத்தினர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கே.ஏ.செங்கோட்டையனை இன்று சந்தித்தனர்.
அப்போது கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: விவசாயிகள் முதல்வரை சந்தித்தபோது என்னையும் அழைத்தனர். முதல்வரை சந்திக்க எனக்கும் முன்அனுமதி அளித்திருந்தனர். மேலும், நான் முதல்வரை சந்திக்க வருவதாக நினைத்துக் கொண்டனர். அமைச்சர் முத்துசாமியும் வாருங்கள் என என்னையும் அழைத்தார். அதற்கு நான் முடியாது என்றும், அவர்கள் (எடப்பாடி பழனிச்சாமி) டெல்லியில் உள்ளனர், அரசியலில் சிக்கலை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று கூறி முதல்வரை சந்திக்க செல்லவில்லை என்றார். பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் குறித்து கேட்டபோது செங்கோட்டையன் சிரித்தபடி சென்று விட்டார்.