சென்னை: விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி தேமுதிக தலைவர் பிரேமலதா நல உதவிகளை வழங்கினார். மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரது இனிய நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகள், ஏழை, எளிய மக்களுக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நல உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா; தேமுதிக அலுவலத்தில் 8,000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. தான் மேற்கொண்ட முதற்கட்ட பிரச்சார பயணம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் உண்மையான எம்.ஜி.ஆராகவே வாழ்ந்தவர். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர் விஜயகாந்த். தற்போது அரசியலுக்கு வருபவர்கள் விஜயகாந்த் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடமே கேட்க வேண்டும். விஜயகாந்த் மறைந்தாலும் தேமுதிகவை தலைநிமிர வைத்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.