இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் மறு உத்தரவு வரும் வரை கொடிக்கம்பம் அகற்ற தடை: 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு
மதுரை:தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தனி நீதிபதி கடந்த ஜன. 27ல் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்த வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தரப்பில், தங்களையும் இந்த வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியும், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கருத்து சுதந்திரத்தின்படி அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. அடையாளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது, அதன் நோக்கத்தை சீர்குலைத்துவிடும்.
சொந்த இடங்களில் கட்சி, கொடிக்கம்பம் வைக்க அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்காமல் கொடியை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 18க்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர், மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.
இதன்படி இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோரது அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோரது அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? கொடிக்கம்பங்கள் இடையூறு என்றால் சிலைகளும் இடையூறு தானே?
அதை ஏன் அகற்றவில்லை? எனவே, இந்த விவகாரத்தில் இடையீட்டு மனு செய்ய விருப்பம் உள்ளவர்கள் குறித்து, அரசு தரப்பில் நாளிதழில் விளம்பரம் வெளியிட வேண்டும். விருப்பம் உள்ளோர், ஆகஸ்ட் 5க்குள் இடையீட்டு மணுக்களை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் தாக்கலாகும் மனுக்களை, விசாரணைக்கு ஏற்க முடியாது’’ எனக்கூறிய நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.