சென்னை: சென்னையில் முதல் சர்வதேச போட்டியான 3வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியையும், 2வது சென்னை சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியையும் நேற்று முதல் 15ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். மாஸ்டர்ஸ் பிரிவில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 பேரும், சேலஞ்சர்ஸ் பிரிவில் 2 வீராங்கனைகள் உட்பட 10 இந்தியர்களும் பங்கேற்கின்றனர். இந்த 2 போட்டிகளிலும் முதல் நாளில் யார், யாருடன் மோதப் போகிறர்கள் எனபதற்கான குலுக்கலும், ஆட்டக்காரர்கள் அறிமுகமும் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
போட்டிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடத்தப்படுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் போட்டி தொடங்க இருந்த விடுதியின் ஒரு பகுதியில் நேற்று, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் வீரர்கள் உட்பட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஸ் ஆட்டக்காரர்கள் உடனடியாக வேறு விடுதிக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து போட்டி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புதன் கிழமை தொடங்குவதாக இருந்த முதல் சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன’ என்றனர்.