முகத்தை துடைப்பதை விமர்சிப்பதா? உள்கட்சி விவகாரத்தை சொல்ல முடியாது: அமித்ஷாவுடன் பேச்சு, சொகுசு காரில் வந்தது குறித்து எடப்பாடி மழுப்பல் பதில்
ஓமலூர்: அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை வெளியில் சொல்ல முடியாது, அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பியபோது முகத்தை கர்சீப்பால் மறைத்தது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழலில், மீண்டும் மலர்ந்த அதிமுக-பாஜ கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
அதேகோரிக்கையை மேற்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் எழுப்பினார். இதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. செங்கோட்டையனின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி சத்யாபாமா உட்பட 13 பேர் கட்சி பதவி பறிக்கப்பட்டது. 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் செங்கோட்டையன் கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, எடப்பாடி மீது சரமாரி புகார்கள் தெரிவித்த அவர், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பின்போது முதலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இருந்தனர். பின்னர் கடைசியாக 20 நிமிடங்கள் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
அதற்கு எடப்பாடி, ‘அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் வரும், வேண்டுமானால் தேஜ கூட்டணியில் அவர்களை இணைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு கூடுதல் சீட் ஒதுக்குகிறோம், அதிலிருந்து நீங்கள் அவர்களுக்கு கொடுங்கள், எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை’ என்று எடப்பாடி கூறியிருக்கிறார். அதன்பின் வெளியில் வந்த எடப்பாடி, ஒரு தொழிலதிபருடன் விலை உயர்ந்த காரில் அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் எடப்பாடி முகத்தை மூடியபடி செல்ல வேண்டிய அவசியம் என்ன? உள்ளே என்ன நடந்தது? என டிடிவி.தினகரன், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நெட்டிசனகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த சர்ச்சையால் டெல்லியில் இருந்து புறப்படும் நேரத்தை மாற்றி சென்னை வந்த எடப்பாடி, விமான நிலையத்தை விட்டு வெளியே வராமலே சேலம் விமானத்தை பிடித்து ஊருக்கு சென்றார். மூகமுடி சர்ச்சைக்கு நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கமளிப்பதாக எடப்பாடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக சார்பில் நான் நடத்தும் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனால் ஊடகங்கள் எப்போதும் என்னை முன்னிறுத்தியே அவதூறு செய்திகளை பரப்புகின்றன. டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு வந்தேன் என்று சில ஊடகங்கள் அவதூறு பரப்பியுள்ளன. வியர்த்ததால் கர்சீப் எடுத்து முகத்தை துடைத்தேன். ஆனால் அதை முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக அவதூறு பரப்பியுள்ளனர். முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது? என்று தெரியவில்லை.
அமித்ஷாவை சந்திக்கப்போகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு தான் டெல்லிக்கு சென்றேன். இதில் எந்த ஒளிவுமறைவும் கிடையாது. முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இனிமேல் ரெஸ்ட்ரூம் போனால் கூட, ஊடகங்களிடம் சொல்லி விட்டுத்தான் போக வேண்டும் என்ற நிலை வந்து விடும் போல் இருக்கிறது. முகத்தை துடைப்பதை மறைத்தேன் என்று கூறி அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. முன்னாள் முதல்வராக இருந்தவர், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர், ஒரு பெரும் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் என்னை திட்டமிட்டு அவமானப்படுத்துவது முறையல்ல.
அமித்ஷாவை நான் சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை. தென்மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, தேசத்திற்காக பாடுபட்ட தமிழகத்தை சேர்ந்த தியாகிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதை நீங்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். அதை கருத்தில் கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தேன். அப்போது எனது சுற்றுப்பயணம் குறித்து அவர் கேட்டறிந்தார். அதற்கு பெரும் வரவேற்பு இருப்பதை அவரிடம் தெரிவித்ேதன். அவர் மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்.
அதிமுக-பாஜ கூட்டணி அமைந்த பிறகு எங்களது உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று ஏற்கனவே அமித்ஷா தெரிவித்தார். தற்போதைய டெல்லி சந்திப்பின்போதும் அதை அமித்ஷா உறுதிப்படுத்தினார். மற்றபடி உட்கட்சி விவகாரங்கள் குறித்து, நானும் அவரும் எதுவுமே பேசவில்லை. அதிமுக சார்பில் நானும், பாஜ சார்பில் அவரும் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கூட்டணி சார்ந்த அதிகாரப்பூர்வமான கருத்துகளாகும். மற்றவர்களின் பேச்சுகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.
அண்மைக்காலமாக திட்டமிட்டு சிலர் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி வருகின்றனர். அவர்கள் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்சி கட்டுப்பாட்டை மீறும் உறுப்பினர்களை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கலாம் என்று அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான், சமீபகாலமாக கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பொதுவெளியில் மேலும் விளக்கமாக கூற முடியாது.
5 ஆண்டுகள் எம்எல்ஏக்கள் ஆதரவாலும், ஒன்றிய அரசு கேட்ட நிதியை கொடுத்ததாலும் அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜவுடன் கூட்டணி அமைத்தோம் என்று கூறினேன். ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் கொடுத்த ஆதரவு தான் அதிமுக ஆட்சிக்கு காரணம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அப்படியானால் 18 எம்எல்ஏக்களை தனியாக அழைத்துக் கொண்டு போய், ஆட்சியை கவிழ்க்க நினைத்த செயலையும் நாம் இங்கே குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும். அரசியல் சூழலுக்கு ஏற்ப எல்லா கட்சிகளும் கூட்டணி அமைக்கிறது. அந்தவகையில் தான், பாஜவுடன் நாங்களும் கூட்டணி அமைத்துள்ளோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
* செங்கோட்டையன் நீக்கமா?
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவீர்களா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு,‘தலைமை முடிவு செய்யும்’ என்று எடப்பாடி தெரிவித்தார்.
* டிடிவியா? டி.டி.,யா?
எடப்பாடி பழனிசாமி பேட்டியில் டிடிவி.தினகரன் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் டிடிவி.தினகரன் என்பதற்கு பதிலாக டிடி, டிடி என்றே திரும்பத்திரும்ப கூறினார். பெயரைக் கூட சரியாக சொல்லத் தெரியவில்லையே என்று எடப்பாடி பற்றி சமூகவலைத்தளங்களில் கிண்டலடிக்கின்றனர்.
* கிடைத்த கார்ல போனாராம்... அந்த கார் பென்ட்லி.. தொழிலதிபர் குறித்த கேள்விக்கு நழுவல்...
‘‘நான் சென்றபோது அமித்ஷா வேறொரு டிஸ்கஷனில் இருந்தார். கொஞ்சநேரம் கழித்து பேசலாம் என்றதால் அங்கு வந்த ஒரு காரில் (பென்ட்லி) ஏறி சாப்பிடச்சென்றோம். அது ஒரு தொழிலதிபரின் கார் என்று சொல்கின்றனர். நான் பல கார்களில் பயணிப்பவன் கிடையாது. தொழிலதிபரும் இல்லை. பல்லாயிரம் கோடி பணமும் என்னிடம் இல்லை. இதனால் தான் கிடைத்த காரில் ஏறிச்சென்றேன். ஆனால் இதற்கும் ஒரு குற்றச்சாட்டை கண்டுபிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது. கிடைத்த காரில் போனேன். இதில் அவரோடு போனாரா? இவரோடு போனாரா? என்ற கேள்வியே தேவையற்றது. ஒரு விவசாயி கட்சிக்கு பொதுச்செயலாளராக இருந்து, முதல்வராகவும் வந்தால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டும் என்பதற்கு நான் தான் உதாரணம்,’’ என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
* முகமூடி பிரச்னை வெடித்ததால் விருதுக்கு கடிதம் என அறிக்கை
அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே சென்றபோது எடப்பாடி பழனிசாமி சென்னையை ேசர்ந்த பாஜ ஆதரவு தொழிலதிபர் ஒருவரின் விலை உயர்ந்த காரில் முகத்தை கர்ச்சிப்பால் மூடியபடி சென்றார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, அதை திசைதிருப்பும் வகையில் முத்துராமலிங்கதேவர் உள்ளிட்ட தியாகிகளுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை கடிதம் ெகாடுத்ததாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். இதுபற்றி அவர் முதலில் எந்த தகவலையும் தெரிவிக்காமல் திடீரென தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
* முகமூடி போட்டு சுற்றியவர் டிடிவி.தான்
எடப்பாடி கூறுகையில், ‘அதிமுக கூட்டணியில் நான் இல்லை; என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறேன். கூட்டணி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று அறிவித்துள்ளார். அவர் என்னைப்பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். முகமூடி அணிந்து ெடல்லிக்கு சென்றேன் என்று கூறியுள்ளார். அவர் தான் முகமூடி அணிந்தவர். டிடிவி தினகரனை கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதன்பிறகு 10 ஆண்டுகள் அவர் சென்னை பக்கமே வரவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு தான், அஞ்சலி செலுத்த வந்து, கட்சியில் தலைகாட்ட ஆரம்பித்தார். இந்த வகையில் 10 ஆண்டுகளாக முகமூடி போட்டுக்கொண்டு சுற்றியவர் டிடிவி தினகரன் தான்’ என்றார்.
* எடப்பாடி பொய் அம்பலம்
டெல்லியில் புதிய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க போவதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரை சந்தித்ததோடு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். ஆனால், நேற்று சேலத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு முன்பே பகிரங்கமாக அறிவித்து விட்டு தான், அமித்ஷாவை சந்தித்தேன், இதில் எந்த ஔிவு மறைவும் இல்லை என்று கூறியுள்ளார். டெல்லி செல்வதற்கு முன், டெல்லியில் இருந்து திரும்பிய பின் என்று அவரது பொய்யை நெட்டிசன்கள் அம்பலப்படுத்தி கலாய்க்கின்றனர்.