பெங்களூரு: கர்நாடக முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையிலான பனிப்போர், ஆதரவாளர்களின் வெளிப்படை மோதலாக வெடித்துள்ளது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே அதிகாரப் போட்டி நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. அமைச்சரவைப் பங்கீடு, வாரிய நியமனங்கள், அதிகாரிகள் இடமாற்றங்கள் எனப் பல்வேறு தளங்களில் இரு தலைவர்களின் ஆதரவாளர்கள் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த நிலையில், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.ராஜன்னா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் கருத்துகள் தொடர்பாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிகழ்வு சித்தராமையா தரப்புக்குப் பின்னடைவாகக் கருதப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளரான எம்எல்ஏ எச்.சி.பாலகிருஷ்ணா, ‘அமைச்சர் பதவியை இழந்ததால் அதிருப்தியில் உள்ள ராஜன்னா, பாஜகவில் சேர விண்ணப்பித்துள்ளார்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ராஜன்னாவின் மகனும் சட்ட மேலவை உறுப்பினருமான ராஜேந்திர ராஜன்னா கூறுகையில், ‘அதிகாரத்திற்காகவும், முதல்வர் பதவியை அடைவதற்காகவும் உங்கள் தலைவருடன் (டி.கே.சிவக்குமார்) சேர்ந்து கட்சி மாறத் தயாராக இருக்கும் குழுவில் பாலகிருஷ்ணாவும் உள்ளார். என் தந்தையின் பதவிப் பறிப்புக்குப் பின்னணியில் சூழ்ச்சி இருக்கிறது. என் தந்தை ஒருபோதும் சட்டப்பேரவையில் பாஜகவின் வழிகாட்டி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலைப் பாடியவர் அல்ல; அவருக்குத் தனிச் சித்தாந்தம் உண்டு’ என்று கூறி, டி.கே.சிவக்குமாரை மறைமுகமாகச் சாடினார். தலைவர்களின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வது, கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.