உட்கட்சி பூசல் விவகாரம்; தமிழக பாஜ நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித்ஷா: அதிமுக-பாஜ கருத்து மோதல் குறித்தும் முக்கிய முடிவு
சென்னை: பாஜவில் நிலவும் உட்கட்சி பூசல் விவகாரம் தொடர்பாக, தமிழக பாஜ நிர்வாகிகளிடம் திடீர் ஆலோசனை நடத்திய அமித்ஷா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக-பாஜ கருத்து மோதல் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜ உடனான கூட்டணி நிர்பந்தம் காரணமாக அமைந்துள்ளது என்று கூறி அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் நேரடியாகவே அதிமுக-பாஜவினரிடையே நேரடியாக மோதல் போக்கு எழுந்து வருகிறது. அதுமட்டுமல்ல, அதிமுக -பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணித்தரமாக கூறி வருவது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக பதில் கொடுக்காமல் நாசுக்காக பதிலடி கொடுத்து வருகிறார். இந்த கூட்டணி தொடர்பாக அதிமுக, பாஜவினரிடையே அடிக்கடி சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் எழுந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு பாஜ நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி கிருஷ்ணா மேனன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட உயர்மட்டக் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேர்தல் கள நிலவரம், தொகுதி பங்கீடு, பொறுப்பாளர்களை நியமிப்பது, 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது உள்ளிட்ட வியூகங்கள் மற்றும் அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, தமிழக பாஜவில் நிலவும் கோஷ்டி பூசல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
பாஜ நிர்வாகிகள் தனித்தனி அணியாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் டெல்லி வரை சென்றுள்ளது. இதனால் அமித்ஷா இன்றைய கூட்டத்தில் டென்ஷனாகி பாஜ நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனால், தமிழக பாஜவில் உள்கட்சி பூசல் புகார்கள் வேதனையளிக்கின்றன. தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும் விதமாக, உள்கட்சி பிரச்சனைகளை தவிர்ப்பது கட்சி நலனுக்கு மிகவும் முக்கியம்.
உள்கட்சி பூசல், கருத்து வேறுபாடு ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து கட்சி பணிகளில் கவனம் செலுத்துவது மிக நல்லது என்று அழுத்தமான குரலில் அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக பாஜ நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இக் கூட்டத்தில் அதிமுக-பாஜ கருத்து மோதல் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.