சென்னை: தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் 25 ஆயிரம் பேர் எழுதினர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1768 மற்றும் கூடுதல் இடங்கள் 1000 என மொத்தம் 2768 இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்குரிய அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.
அதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை இணைய தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகள் ஜூலை 21ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நியமனத் தேர்வு எழுத 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த போட்டித் தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் 92 மையங்களில் நடந்தது. அதில் 25 ஆயிரத்து 319 பேர் தேர்வு எழுதினர்.