புதுடெல்லி: பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் கைதான யூடியூபர் சங்கர், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த மே 12ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சங்கரின் தாயார் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுதன்ஷு துலியா, அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு யூடியூபர் சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதே சமயம் இந்த உத்தரவு குண்டர் தடுப்பு சட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை மட்டுமே நீடிக்கும் என்ற உச்ச நீதிமன்றம், வேறு ஏதேனும் வழக்கில் சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தால் இடைக்கால ஜாமீன் பொருந்தாது என உத்தரவிட்டனர்.