இடைக்கால பிரதமர் சுசிலா கார்க்கி அதிரடி; நேபாளத்தில் மார்ச் 5ல் நாடாளுமன்ற தேர்தல்: ஊரடங்கு உத்தரவு வாபஸ்; கடைகள் திறப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து பல்வேறு இடங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் திரும்ப பெறப்பட்டது. அங்கு மார்ச் 5ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சமூக ஊடகங்கள் மீதான தடை காரணமாக கடந்த 8ம் தேதி தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இந்தியர் உட்பட 51 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து செவ்வாயன்று பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
ராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டை கையிலெடுத்தது. இதனை தொடர்ந்து இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன்தினம் சுசீலா கார்க்கி நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து நடந்த இடைக்கால பிரதமர் சுசிலா கார்க்கி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அதிபர் ராம் சந்திர பவ்டேல் உடனடியாக அங்கீகரித்தார்.
அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இரவு 11மணி முதல் பிரதிநிதிகள் அவை( நாடாளுமன்றம்) கலைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும் போராட்டம் நடத்திய ஜென் இசட் குழுவினரின் முக்கிய கோரிக்கை நிறைவேறியதால் நேபாளம் முழுவதும் அமைதி திரும்பியது.
இயல்பு நிலை திரும்பியதால் தலைநகர் காத்மண்ட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. கடைகள், மளிகை, காய்கறி கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் நேற்று திறக்கப்பட்டன. சாலைகளில் வழக்கம்போல் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
அமைச்சரவை விரிவாக்கம்: நேபாள அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சிறிய எண்ணிக்கை அளவிலான அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. பிரதமர் சுசிலா கார்க்கி உள்துறை, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு உட்பட சுமார் இருபது அமைச்சகங்களை வகிப்பார். என்று கூறப்படுகிறது. இரண்டு நாள் போராட்டத்தின் போது சிங்தர்பார் செயலகத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் எரிக்கப்பட்டதால் சிங்தர்பார் வளாகத்திற்குள் உள்துறை அமைச்சகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் பிரதமர் அலுவலகத்திற்காக தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் அலுவலகத்தை அங்கு மாற்றுவதற்காக கட்டிடத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் சாம்பலை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றன. போராட்டத்தின் போது சூறையாடப்பட்ட மற்றும் தீக்கிறையாக்கப்பட்ட அரசு கட்டிடங்களில் நேற்று சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பிரதமர் சுசிலா கார்க்கி நேற்று காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள சிவில் மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு போராட்டத்தின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பெண்கள் அதிகாரமளிப்புக்கு சுசிலா எடுத்துக்காட்டு பிரதமர் மோடி
நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி பகிர்ந்த எக்ஸ் தளத்தில் பதிவில்,’நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ள சுசிலா கார்க்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் உள்ள நமது சகோதர, சகோதரிகளின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய மோடி,
‘இந்தியாவும் நேபாளமும் நம்பிக்கை மற்றும் கலாச்சார உறவுகளால் பிணைக்கப்பட்ட நெருங்கிய நண்பர்கள். 140 கோடி இந்தியர்களின் சார்பாக புதிய பிரதமர் சுசிலா கார்க்கியை நான் வாழ்த்த விரும்புகிறேன். நேபாளத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அவர் வழி வகுப்பார் என்று நான் நம்புகிறேன். சுசிலா கார்க்கி அந்த நாட்டின் உயர் பதவியை வகிப்பது பெண்கள் அதிகாரமளிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. அரசியல் கொந்தளிப்பு முடிந்த பிறகு கடந்த சில நாட்களாக குடிமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் கட்டிடங்களை சுத்தம் செய்தல் மற்றும் வண்ணம் தீட்டுவதில் ஈடுபடுவது நேபாள மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது. இத்தகைய கொந்தளிப்பான காலங்கள் இருந்தபோதிலும், ஜனநாயக மதிப்புகளை மிக உயர்ந்த நிலையில் வைத்திருந்த நேபாள மக்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்’ என்றார்.
முக்கிய ஆவணங்கள் சேதம்
நேபாள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரகாஷ்மான் சிங் ரவுத் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சமீபத்தில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டங்களின்போது, தீ விபத்து, கல்வீச்சு நாசவேலை மற்றும் கொள்ளை காரணமாக நீதிமன்ற கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. நாட்டின் நீதித்துறை வரலாற்றின் ஒருபகுதியாக இருக்கும் முக்கியமான ஆவணங்கள் வன்முறையில் அழிக்கப்பட்டுவிட்டன. குடிமக்களின் நீதிக்கான எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவில் மீண்டும் தொடங்குவோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்றார்.