ரூ.10 லட்சம் வரை 4% வட்டியில் பெறலாம் மாணவர் கிரெடிட் கார்டில் 1 லட்சம் பேருக்கு கடன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பெருமிதம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாணவர் கடன் அட்டை திட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மம்தா கூறினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, மாணவர்கள் எந்தவித நிதி நெருக்கடியும் இல்லாமல் கல்வியைத் தொடர உதவும் வகையில் மாணவர் கடன் அட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொறியியல், மருத்துவம், சட்டம், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கடனைப் பெறலாம். கூட்டுறவு வங்கிகள், பொதுதுறை வங்கிகளிடமிருந்து ஆண்டுக்கு 4% எளிய வட்டியில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடனைப் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், உயர் கல்வியை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டு மாணவர் கடன் அட்டை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.10 லட்சம் வரை கடன்களை பெற முடியும். மாநிலத்தில் கடன் அட்டை திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை இன்று(நேற்று) ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டி சாதனை படைத்துள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

