கங்கைகொண்டசோழபுரத்திற்கு பிரதமர் மோடியின் வருகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அவமதிப்பு: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு
திருச்சி: பிரதமர் வருகையின்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு அவமதிப்பு நடந்ததாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தனது சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் பேசும்போது தன் (பாஜ) கட்சியை சார்ந்தவர்கள் பெயரை மட்டுமே கூறிவிட்டு, மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சா.சி.சிவசங்கர் ஆகியோர் பெயரை உச்சரிக்கவில்லை. இந்த தொகுதியின் எம்எல்ஏவான எனது பெயர் அழைப்பிதழிலிலும், செய்தித்தாள் விளம்பரங்களிலும் இடம்பெறவில்லை. மாறாக பா.ஜ. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெயர் இடம்பெற்றிருந்தது.
ஒன்றிய அரசின் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 2 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. மாநில அரசின் சார்பில் எனக்கு காலை 8.30 மணியளவில் தான் அழைப்பிதழ் கொடுத்தார்கள். கார் பாசும் வரவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதால், காலையில் வட்ட அளவிலான அலுவலர் வந்து அழைப்பிதழ் கொடுத்தார். அவர் நீங்கள் எம்.எல்.ஏ என்றெல்லாம் கொடுக்கவில்லை. கலெக்டரிடம் கூறி வருத்தப்பட்டதால் கொடுக்க சொன்னார்கள் என்று கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியரின் தயவால் வேறு ஒரு மாவட்ட அதிகாரியின் கார் பாஸை எனக்கு 10.30 மணியளவில் அனுப்பி வைத்தார். அதன்பின்னரே விழா நிகழ்விடத்திற்கு சென்றேன். அங்கு நான் உட்கார வைக்கப்பட்ட இடம் ஏழாவது வரிசை. அரியலூர் எம்எல்ஏ சின்னப்பாவுக்கு எட்டாவது வரிசை.
எங்களுக்கு முன்பாக இருந்தவர்கள் இந்த மாவட்டம், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள். பா.ஜ. வின் மாநில நிர்வாகிகள், ஆதரவாளர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள். திமுக சார்பில் ஒருவரும் அழைக்கப்படவில்லை. 2016-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது, இப்போதைய முதல்வர் பின்வரிசையில் பத்தோடு பனினொன்றாக அமர வைக்கப்பட்டார். அதுபோல் தான் இப்போது 2 எம்.எல்.ஏ -க்களுக்கும் நடந்தது. அவமரியாதை செய்வதில் அதிமுகவிற்கு சளைத்தவர்கள் இல்லை பா.ஜ. என்று நிரூபித்துள்ளார்கள். இது ஒன்றிய அரசின் அரசு விழாவா அல்லது பாஜ-வின் கூட்டணி கட்சி விழாவா என்ற கேள்வியே மனதில் எழுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.