Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

*முதல்போக சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை நிரம்பாததால் ஆயக்கட்டு வயல்களில் முதல்போக நெல் சாகுபடி தற்போது கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேவதானப்பட்டிக்கு வடக்கே, மேற்கு தொடர்ச்சிமலைகளில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு மஞ்சளாறு, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

இந்த அணையின் மொத்த உயரம் 57 அடியாகும், மொத்த கொள்ளளவு 487.35 மில்லியன் கன அடியாகும். இதில் பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 3,386 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு(வலது பிரதானக் கால்வாய்) பாசனப் பரப்பு 1,873 ஏக்கரும், தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கரும் என மொத்தம் 5,259 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையின் மூலம் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கணவாய்பட்டி, பரசுராமபுரம், கட்டகாமன்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரன் கோட்டை, சிவஞானபுரம் உள்ளிட்ட இடங்கள் பாசன வசதி பெறுகிறது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு முக்கிய குடிநீர் ஆதாராம் மற்றும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு பாசனப்பரப்பிற்கு நீர் ஆதாரமாக மஞ்சளாறு அணை விளங்குகிறது.

ஆண்டு தோறும் அக்.15ம் தேதி ஆயக்கட்டு முதல் போகம் நெல் சாகுபடிக்கு அணை திறப்பது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலேயே அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 15ம் தேதி வழக்கம் போல் முதல்போக நெல் நடவு பாசனத்திற்கு அணை திறக்கப்பட்டது.

ஆனால் நடப்பாண்டில் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து சிறிதளவே வருகிறது. இதனால் பழைய ஆயக்கட்டு பகுதி மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் நாற்றங்கால் பணியினை விவசாயிகள் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த உயரம் 44.6 அடியாகவும், கொள்ளளவு 249.46 மி.கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 35 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை.

மேற்கு தொடர்ச்சிமலை மஞ்சளாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தால் மட்டுமே அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் நடப்பாண்டில் மஞ்சளாறு அணை ஆற்றுப்பாசன ஆயக்கட்டு முதல் போக நெல் சாகுபடி கேள்விக்குறியாக உள்ளதாக பாசனப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.